தேனி, பிப். 6 –
வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீருக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பருவமழை ஏமாற்றியதால் தேனி மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறையான நிலை உருவாகி உள்ளது. இது தவிர வைகைஅணையின் நீர் மட்டமும் எப்போதும் இல்லாத அளவிற்கு 23 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து இல்லாததாலும் படிப்படியாக அணையின் நீர்மட்டம் குறைவதாலும் மதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. பெரியாறு அணையில் இருந்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. திங்கள் கிழமை காலை முதல் அணைக்கு நீர்வரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளதால், அந்த தண்ணீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. மழை இல்லாத நிலையிலும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்களன்று பெரியாறு அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 23.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நாளை அணைக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இருப்பு 177 மி. கன அடியாக உள்ளது. மஞ்சளாறு நீர் மட்டம் 33.80 அடி சோத்துப்பாறை நீர்மட்டம் – 67.07 அடி.

Leave A Reply