புதுதில்லி, பிப். 6 –
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஒரு வாரத்தில் தீர்ப்பளிக்கப்படலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா, முதன்முறையாக தமிழக முதல்வர் பதவியை வகித்த 199-96 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 66 கோடிக்கு சொத்துக்களை குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதேகாலத்தில், ஜெயலலிதாவுடன் இருந்த அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சொத்துக்களை குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக 18 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இம்மேல் முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, வருமானத்திற்கு அதிகமாக 10 சதவிகிதம் வரை சொத்து இருக்கலாம் என்று கூறி, ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் 2015 மே 11ஆம் தேதி விடுதலை செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரிவர்வே அக்ரோ புரொடக்ட்ஸ், மீடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், லெக்ஸ் பிராபர்ட்டி டெவப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களையும் குமாரசாமி விடுவித்தார்.ஆனால், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஊழல் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்தும், சொத்து மதிப்பை கணக்கிட்டதில் பிழைசெய்து, நால்வரையும் குமாரசாமி விடுவித்து விட்டதாக கர்நாடக அரசு குற்றம் சாட்டியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தது. திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், சுப்பிரமணியசாமி உள்ளிட்டோர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவற்றின்மீது விசாரணை நடத்திய- நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய்ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் தேதி அனைத்து தரப்பிலும் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தீர்ப்பு குறித்து திங்களன்று உச்சநீதிமன்றத்திடம் நினைவுபடுத்தினார். இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ், “எல்லாம் முடிந்து விட்டது; ஒரு வாரம் பொறுத்திருங்கள்” என்று கூறினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முக்கிய நபரான ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இந்தத் தீர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர். அதிலும் குறிப்பாக, சசிகலா ஆளும் அதிமுக-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டு, முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் அளிக்கவுள்ள தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகும்.

Leave A Reply