எம்.ஆர். தடுப்பூசி ( M.R.VACCINE) என்ற ‘இருநோய்த் தடுப்பூசி’ பிப்ரவரி 6ந்தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் போடும் இயக்கம்தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் துவங்கி வந்தது. எம்.எம்.ஆர். (M.M.R) எனப்படும் முத்தடுப்பு ஊசி பொன்னுக்கு வீங்கி, (MUMPS) தட்டம்மை (MEASLES) மற்றும் ரூபெல்லா (RUBELLA – GERMAN MEASLES) ஆகிய மூன்று நோய்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் மருத்துவமனைகளில் இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகிறது. ‘தட்டம்மை’ தடுப்பூசி (மீசில்ஸ்) மட்டும் தனியாக 1985 முதல் தேசிய நோய்த்தடுப்பு திட்டப்படி இந்தியா முழுவதும் 9 மாத குழந்தைகளுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. ‘போலியோ’ என்ற இளம்பிள்ளை வாதநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில், அடுத்த இலக்காகதட்டம்மை நோயையும், ரூபெல்லாநோயையும் ஒழிக்கும் விதத்தில் மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து எம்.ஆர். தடுப்பூசியினை தேசிய தடுப்பூசித்திட்டதில் சேர்க்கவுள்ளனர். இதன் முன்னோட்டமாக தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலங்களில் பிப்ரவரி 6 திங்களன்று இந்த தடுப்பூசி இயக்கம் துவங்கியுள்ளது.

‘தட்டம்மை மற்றும் ரூபெல்லா’ நோய்கள் வைரஸ் நோய்களாகும். ‘தட்டம்மை’ ஏற்பட்டால், அதிக காய்ச்சலும், உடம்பு முழுவதும் தடிப்பும் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச்சத்தும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலையும், நிமோனியா காய்ச்சலையும் ஏற்படுத்தும். சிலர் இறக்க நேரிடும். ‘ஜெர்மன் மீசில்ஸ்’ எனப்படும் ‘ரூபெல்லா’ நோய், கருவுற்ற பெண்களுக்கு ஏற்பட்டால் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியதாகவும், பல்வேறு உடல் உறுப்புகளில் (இருதயம் உட்பட) குறைபாடுகளுடனும் பிறக்கும். கருக்கலைவு ஏற்படுவதற்கு இந்த நோய் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே 15 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்தத் ‘தடுப்பூசி’ போடுவதால் இந்த நோயை முற்றிலுமாக தடுக்க இயலும். 2013 கணக்கெடுப்பின்படி, உலகில் 1.40 லட்சம் குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனர், அதில் 50 % மேல் இந்திய குழந்தைகள் (70,000க்கும் மேல்). மேலும் உலகசுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி 2016-17ம் ஆண்டில் ரூபெல்லா தடுப்பூசியை, தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்தாக வேண்டும். 2020ல் தட்டம்மை நோயைமுழுமையாக ஒழிக்க வேண்டும் என்று இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வளவு உண்மைகள் இருந்தும் ஏன் எதிர்ப்பு கிளம்பியது? இதற்கு காரணம், அறிவியலைத் தவறாகப் புரிந்துகொள்வதும், திரித்துச் சொல்லவதும், வாட்ஸ் ஆப் போன்ற தகவல்தொடர்பு வழிகளில் வரும் ஆதாரமற்ற தகவல்களும் ஆகும். அரசுத் தரப்பிலும் இது குறித்த சரியான தகவல்களை, சரியான நேரத்தில் மக்களிடம் சொல்லாததும் முக்கியக் காரணமாகும். பொதுமக்கள் ‘பல்ஸ் போலியோ’ போடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், போதிய விளம்பரம் தராமல், பள்ளிகளுக்கு ‘இலவச ஊசி’ போடுவதற்கான ஆணையைப் பிறப்பித்தது தவறு. பள்ளிகளும், ‘ரிப்போர்ட் கார்டு’ போல எம்.ஆர். ஊசி போட்டுக்கொள்ள சம்மதம்
என்று பெற்றோர்களுக்கு குழந்தைகள் மூலம் கடிதம் கொடுத்து, தங்கள் பங்கிற்கு குழப்பத்தை ஏற்படுத்தினர்.மேலும், இது போன்ற ‘தடுப்பூசி இயக்கங்களை’ முழுமையாக நடத்த வேண்டுமெனில் தனியார் குழந்தைகள் மற்றும் பொது மருத்துவர்களுக்கு்ம் இலவச ஊசிகளை வழங்கி ஈடுபடுத்தியிருக்கவேண்டும். ‘தேசியத் தடுப்பூசித்திட்டத்தில்’ எம்.ஆர். தடுப்பூசியை சேர்ப்பதற்கானமுன்னோட்டம் என்ற முறையிலும், முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்ப
தாலும், மக்களுக்கான மருத்துவர் அரங்கம் இந்தத் திட்டத்தை வரவேற்கிறது.
கட்டுரையாளர்: பொதுச் செயலளார். மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம்

Leave A Reply

%d bloggers like this: