திருப்பூர், பிப்.3 –
பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் பகுதி லட்சுமிநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக இப்பகுதி மக்களுக்கு குடிநீரும், உப்புத் தண்ணீரும் கிடைக்கவில்லை.  இப்பகுதிக்கு அருகில் வசிக்கும் நூறு குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்கி வந்த குழாயும் உடைந்து விட்டது. ஒரு மாதமாகியும் சரி செய்யப்படவில்லை. அவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களுக்குக் குடிநீரும், இதர உபயோகத்திற்கு தண்ணீரும் கிடைக்கவில்லை. எனவே இப்பகுதி குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளியன்று மனு கொடுத்தனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.பவித்ரா, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியகுழு உறுப்பினர் சிவசாமி, சண்முகம் மற்றும் கொடுவாய் பகுதி சிஐடியுவைச் சேர்ந்த குமார், செல்வம் உள்பட சுமார் ஐம்பது பேர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாத நிலையில் வேறொரு அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. மேற்கண்ட பகுதியில் திங்களன்று நேரில் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்று மாதர் சங்கச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி தெரிவித்தார்.

Leave A Reply