தீக்கதிர்

நாகலாந்து – போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

கவுகாத்தி , பிப். 01 –

நாகலாந்து மாநிலத்தில் போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர்.

நாகாலாந்து மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அம்மாநில அரசு ,கூட்டு ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை இரண்டு மாதம் தள்ளி வைக்க திங்களன்று முடிவு செய்தது. இந்நிலையில் செவ்வாயன்று கவுகாத்தி உயர் நீதிமன்றம் , பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்கள் திமாபூர் மற்றும் லாங்லெங் மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது திமாபூர் மாவட்டத்தில் உள்ள அம்மாநில முதல்வரின் இல்லத்தையும் , லாங்கெங் மாவட்ட நீதிபதி வீட்டையும் முற்றுகையிட முயன்றனர். மேலும் 11 வாக்குச்சாவடிகளை சேதப்படுத்தினர். இதையடுத்து , போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் பலியாகினர். மேலும் சுமார் 12 பேர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக வாக்குப்பதிவு நாளான இன்று பழங்குடி மக்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எனினும் 12 நகரங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. போராட்டம் காரணமாக திமாபூர் மற்றில் லாங்லெங் மாவட்டங்களில் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.