நாகர்கோவில், ஜன.30-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10 வது அகில இந்திய மாநாடு பிப்ரவரி 1 முதல் 5ந்தேதி வரை கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான கொடிப்பயணம், ஞாயிறன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து துவங்கியது. அகில இந்திய துணைச்செயலாளர் முகமது ரியாஸ் தலைமையிலான இந்தப் பயணக்குழுவை கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி துவக்கி வைத்தார்.
இந்த கொடிப்பயணம் துவங்கியது முதலே இருசக்கர வாகனப் பேரணியில் கொடி பிடிக்கக்கூடாது; கோஷம் போடக்கூடாது எனக்கூறி காவல் துறையினர் தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி சந்திப்பில் வாகனங்களை தடை ஏற்படுத்தித் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கோட்டார் பகுதிக்கு பேரணி வந்த போது கொடியைப் பறித்து பிரச்சனை ஏற்படுத்தி போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கினர். நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் பயணக்குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தப் பகுதியிலும் காவல்துறையினர், இங்கு பேரணியில் வந்தவர்கள் நிற்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து குமாரகோவில், களியக்காவிளை பகுதியிலும் காவல் துறையினர் பேரணியை சீர்குலைப்பதிலும், செயற்கையாக போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி பிரச்சினை ஏற்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், பேரணியில் கலந்துகொண்ட கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி, வாலிபர் சங்க அகில இந்திய துணைச்செயலாளர் முகமது ரியாஸ், மாவட்ட தலைவர் எபிலைசியஸ் ஜோயல், மாவட்ட செயலாளர் ரெஜீஸ் குமார், மாநில தலைவர் செந்தில், மாநில செயலாளர் எஸ்.பாலா, மாநில பொருளாளர் தீபா உட்பட 158 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.