விந்தன் தமது இறுதிக் காலத்தில் ‘ பெரியார் அறிவுச் சுவடி’, ‘சமூகநீதி’ ஆகிய ஆக்கங்களை உருவாக்கியதற்கு ஏதேனும் அவரது முற்காலப்படைப்புகளில் ஏதுக்கள் உண்டா? என்று தேடினால் 1956ல் அவர் எழுதிய ‘பசிகோவிந்தம்’ கிடைக்கிறது. இந்த நூல், தமிழ் இலக்கண மரபில் புடைநூலாகும். புடைநூல் என்பது இதற்கு முன்பு எழுதிய நூல் ஒன்றின் வடிவிலேயே, அந்நூல் கருத்தை ஏற்றோ மறுத்தோ எழுதும் நூல் என்று புரிந்து கொள்ளலாம்.

சங்கராச்சாரி ‘மோக முத்கரம்’ எனும் நூலொன்றை எழுதியுள்ளார்.; மோகத்தை உடைக்கும் சம்மட்டி என்று அதற்குப் பொருள். இந்த நூலைத் தழுவி‘பஜகோவிந்தம்’ எனும் பெயரில் சமஸ்கிருதத்தில் பலர் எழுதியுள்ளனர். தமிழில் இந்நூலைத் தழுவி ‘பஜகோவிந்தம்’ என்னும் நூலை இராஜகோபாலாச்சாரி எழுதியுள்ளார். இந்த நூலுக்கு புடைநூலாகவே விந்தன் ‘பசிகோவிந்தம்’ என்னும் நூலை உருவாக்கியுள்ளார். “அறிவு நன்றாக முற்றி இதயத்தில் பதிந்தால் அது ஞானமாகும். அந்த ஞானமானது வாழ்க்கையுடன் கலந்து ஒன்றாகச் சென்று செயலுரு வமடைந்தால் அதுவே பக்தியாகும். முற்றிய அறிவு பக்தி என்று சொல்லப்படும்” என்பது இராஜ கோபாலாச்சாரியார் பதிவு. இதனையே விந்தன் தமது நூலில் “பசிவேறு பக்திவேறு என்று பக்குவமடையாத சிலர் பேசுவ துண்டு. எடுத்த விஷயத்தைக் குழப்பி, ஏமாந்தவரை லாபம் என்று கருது வோர்க்கப்படிப்பட்ட சொற்றொடர்கள் ஆங்காங்கே பிரயோகப் படுத்துகிறார்கள். அவற்றைப் பார்த்து நீங்கள் மயங்கிவிடக்கூடாது.

எதையும் ஊன்றிப் படிக்க வேண்டும். தவறான பொருளை எடுத்துக் கொண்டு ததிங்கிணதோம் போடக் கூடாது. பசியும் பக்தியும் ஒன்றே, இரண்டல்ல. பசி முத்தினால் பக்திக்கு அவசியமில்லை; புலன்கள் அனைத்தும் ஏன் கடைசி மூச்சு உட்பட தாமாகவே அடங்கிவிடும். ‘தத்துவம்’ இதுவே!” இராஜாஜி கூறும் பக்தியை விந்தன் பசியாகக் கட்டமைக்கிறார். பசி உள்ளவர்களிடம் பக்திபேசுவது அப்பட்டமான மோசடி என்பதுவிந்தன் கருத்து. இந்த வகையில் சங்கராச்சாரியார், இராஜகோபாலாச்சாரியர் ஆகியோர் பேசும் பக்தி மரபை எளிய சொற்களால் மறுத்து அவை மக்களை ஏமாற்றும் தந்திரம் என்பதை ‘பசிகோவிந்தம்’ நூலில் வெளிப்படுத்துகிறார்.

‘பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
பஜகோவிந்தம் மூடமதே’
என்னும் வரிகளை விந்தன்
பசிகோவிந்தம் பசிகோவிந்தம்
பசிகோவிந்தம் பாடு
பரலோகத்தில் இடம் தேடலாம்
பசிகோவிந்தம் பாடு!
படிக்காதிரு படிக்காதிரு
படிக்காதிரு பயலே!
படித்தால் எமன் வரும்போதுனைப்
பகவான் கைவிடுவார்”

என்று விந்தன் கட்டமைக்கிறார். ‘பஜகோவிந்தம்’ நூல் முதன்மையாக நிலையாமை குறித்துப் பேசுகிறது. இதனால் ஆசை, மோகம் ஆகிய பிறவற்றை மனிதன் கொல்வதுகுறித்தும் பேசுகிறது. விந்தன் இவ்வகையான சொல்லாடல்கள் என்பவை பாமர மக்களை ஏமாற்று வதற்காக உருவாக்கப்பட்டவை என்று உறுதியாக நம்புகிறார்.

‘பணமேனடா பணமேனடா
பணமேனடா பயலே?
பணத்தாசை வளர்த்தாலது
பணக்காரர் மேல் பாயும்
படுவாய்தினம் படுவாய்தினம்
படுவாய், பாடுபடுவாய்!
பசித்தாலது பகவான் செயல்
பஜகோவிந்தம் பாடு’

என்று விந்தன் எழுதுகிறார். இராஜாஜி எழுதியுள்ள முப்பத்தோரு பாடல்களுக்கு இணையாக இவரும் முப்பத்தோரு பாடல்களை எழுதியுள்ளார். இராஜாஜி திருக்குறள் வரிகளைப் பயன்படுத்தி விளக்கம் எழுதுவதை மறுத்து விந்தன் விளக்கம் எழுதுகிறார். இவ்வகையில் சமய மரபை மறுதலித்து பகுத்தறிவு மரபை முன்னெடுக்கும் நூலாகப் பசிகோவிந்தம் அமைகிறது.

1965 ஆம் ஆண்டுகளில் விந்தன் எழுதிய ‘பசி கோவிந்தம்’ நூலுக்கு மூலநூலான இராஜாஜியின் நூல் பஜகோவிந்தம் , அதேகாலச்சூழலில் எழுதப்பட்டது. குலக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்ட வரைவுகளை இராஜாஜி இந்தக் காலச் சூழலில் தான் கொண்டுவந்தார். மிகவும் பிற்போக்கான சநாதனியாகச் செயல்பட்ட இராஜாஜியை நேருக்கு நேர் மோதியவராக விந்தன் அமைகிறார். பெரும் அரசியல் செல்வாக்குடைய, இந்தியஅளவில் பெரும் தலைவராகவும் இருந்த நபரை சாதாரண எழுத்தாளராக இருந்த விந்தன் எதிர்கொண்ட முறைமை வியப்பளிக்கும் தன்மை கொண்டது. இவ்வகையான மன உறுதியை சுயமரியாதை இயக்கம் அவருக்கு வழங்கியிருக்கிறது. அந்த நூல் அச்சாக்கம், எழுதப்பட்டுள்ள மொழி ஆகிய அனைத்தும் இராஜாஜியை கடுமையாகப் பகடி செய்யும் வகையில் உள்ளன. விந்தனின் இச்செயல்பாட்டை தமிழ்ச்சமூகம் அறிந்திருப்பதாகவே அறிய முடியவில்லை. அன்றைய சூழலில் திமுக அமைப்பை விமர்சனம் செய்பவராகவும் விந்தன் இருந்தார். இராஜாஜியையும் திமுக அமைப்பையும் ஒரே நேரத்தில் விமர்சனம் செய்யும் அவரது மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசியல் வரலாற்றில் நடைமுறைச் செயல்பாடுகள் சார்ந்த விந்தன் மேற்கொண்ட அணுகுமுறையை நாம் விதந்து பேச வேண்டும். இவ்விதம் 1950கள் தொடங்கி அவரது இறுதிக் காலம் முடிய சுயமரியாதைச் சிந்தனை மரபை உள் வாங்கி வாழ்ந்த மனிதராகவே விந்தன் வாழ்ந்திருக்கிறார். சிறுகதைப் படைப்பாளராகத் தொடக்க காலத்தில் தம் எழுத்துப் பணியைத் தொடங்கியவர், பிற்காலங்களில் தமிழ்ச் சமூகத்தின் இயங்குதளத்தில் பெரியாரைப் புரிந்து கொண்டவராகவே வாழ்ந்திருக்கிறார். சுயமரியாதை இயக்கங்களில் நேரடி பங்கு பெறாமல், அதே நேரத்தில் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகள் மற்றும் தந்தை பெரியார் செயல்பாடுகள் ஆகியவற்றில் பெரும் மதிப்புடையவர்களாக வாழ்ந்த வ.ரா. என்னும் வ.ராமசாமி மற்றும் கோவிந்தன் எனும் விந்தன் ஆகியோரை இன்றைய சுயமரியாதை இயக்கம் கொண்டாடும் தேவையுண்டு.

(‘நிமிர்வோம்’ இதழுக்கு எழுதிய கட்டுரையின் சுருக்கம்)

Leave a Reply

You must be logged in to post a comment.