நியூயார்க், ஜன. 29 –
ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரக் கூடாது என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20 அன்று பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறுவோரை தடுக்க இரண்டாயிரம் மைல் நீளத்திற்கு எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப உத்தரவிட்டார். இதற்கு மெக்சிக்கோ பணம் தர மறுப்பதால் அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகின்ற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்கவும் உத்தரவிட் டுள்ளார். முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளை தனது தேர்தல் பிரச்சாரத்திலிருந்து தொடர்ந்து வெளிப் படுத்தி வந்தார்.

அமெரிக்காவை நேசிப்பவர்களும் அமெரிக்காவை ஆதரிப்பவர்களும் மட்டுமே தங்கள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என்றும் டிரம்ப் அடாவடியாக கூறியுள்ளார். மேலும் ஈரான், இராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த 90நாட்களுக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த நாடுகளிலிருந்து புகலிடம் தேடி யார் வந்தாலும் அனுமதி அளிக்கப்படாது என்றும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.

11 அகதிகள் கைது:
இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் புகலிடம் தேடி வந்த 11 அகதிகளை அமெரிக்ககுடியேற்றத் துறையினர் கைது செய்துள்ளனர். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, நியூயார்க், வாஷிங்டனில் போராட்டங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கடும் எதிர்ப்பு:
நியூயார்க் ஜான் எப். கென்னடி விமானநிலையத்தில் நூற்றுக்கணக் கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை இப்படி ஒரு போராட்டம் இங்கு நடந்ததில்லை என்று பலரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாங்கள் அனைவரும் இங்கு வந்து குடியேறியவர்கள்தான் என்று அட்டையில் எழுதிய வாசகத்துடன் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இங்கு மட்டுமல்லாமல் அமெரிக்க நாட்டின் பல்வேறு விமானநிலையங்களிலும் இது போன்ற போராட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. நியூயார்க் விமான நிலையத்தின் 4வது முனையப் பகுதியில் இந்தப்போராட்டம் நடந்தது. டிரம்ப் தவறு தலான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவருக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்றுபோராட்டத்தில் ஈடுபட்டோர் கூறினர்.

இடைக்காலத் தடை:
இந்த நிலையில் டிரம்ப்பின் உத்தரவுக்கு நியூயார்க் நகரின் கிழக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அன்டொனேலே டொனால்டு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள், விசாவுடன் வரும் யாரையும் அமெரிக்கவை விட்டு வெளியேற்றத் தேவையில்லை என்று நீதிபதியின் உத்தரவில் கூறப்பட் டுள்ளது.

கூகுள் நிறுவனம் குற்றச்சாட்டு:
சான்பிரான்சிஸ்கோவில் நடந்த போராட்டத்தில் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் கூகுள் நிறுவனம் சார்பாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டதாக அவர் கூறினார். ஆனால் தானும் ஒரு அகதி என்ற அடிப்படையிலேயே அவர் பங்கேற்றதாக செய்திகள் கூறுகின்றன. 43 வயதான செர்ஜி அடிப்படையில் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர். மாஸ்கோவில் பிறந்தவர். அகதியாக அமெரிக்கா வந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது. முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் குடியேற விதிக்கப்பட்டுள்ள தடை கூகுள் நிறுவன ஊழியர்களை கடுமையாக பாதித்துள்ளது என கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை குற்றம்சாட்டியுள்ளார்.

தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருக் கும் தனது ஊழியர்களை அமெரிக்கா திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். தடைவிதிக்கப்பட்டுள்ள இந்நாடுகளில் மட்டும் 187 கூகுள் நிறுவன ஊழியர்களின் வேலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வால்ஸ்ட்டீரீட் ஜெர்னலுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். வெளிநாடுகளிலிருந்து அறிவுசார் பணியாளர்களை கொண்டு வருவதில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளது என்றும் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க்கும் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் இத்தகைய அதிரடி நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க துவங்கியுள்ளன. ஈரான், இராக், ஏமன் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்காக கடந்தகாலங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மிக கொடூரமான போர்களை சூழ்ச்சிகளை மேற்கொண்டதன் தொடர்ச்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கை, உலகநாடுகளில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடா – பிரான்ஸ் எதிர்ப்பு:
அமெரிக்காவிற்குள் அகதிகள் யாரும் நுழைய முடியாதபடி தடைவிதித்துள்ள நிலையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அகதிகளை கனடா அரசு வரவேற்பதாக கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.டிரம்பின் முடிவு குறித்து பிரான்ஸ் விமர்சித்துள்ளது. அகதிகளை வரவேற்பது ஒரு கடமை என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் மார்க் அய்ரால்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.நா. வேண்டுகோள்:
அமெரிக்காவிற்குள் நுழைய அகதிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிக தடை ஒன்றை பிறப்பித்ததை அடுத்து, அகதிகளை தொடர்ந்து பாதுகாக்க அமெரிக்காவை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. சிரியாவிலிருந்து தப்பித்து வரும்பொதுமக்கள், அடுத்த அறிவிப்பு வரும் வரை அமெரிக்காவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ஏழு நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாவானது மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட உள்ளது.உள்நாட்டு மோதலிலிருந்து தப்பிப்பவர்களின் தேவைகள் என்பது பெரியதாக இருக்காது என்று ஐ.நா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.