எழுத்தாளர் விந்தன் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி (22-09-1916, 22-09-2016) கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நூற்றாண்டு விழா விற்காக, விந்தன் அவர்களின் உற்ற நண்பர் செ.து சஞ்சீவி அவர்கள், ‘விந்தனின் நினைவாக சில பதிவுகள்‘ என்ற நூலையும், பேரா.வீ.அரசு அவர்கள் ‘விந்தன் உலகம்‘ என்ற நூலையும் எழுதியுள்ளனர். விந்தன் நினைவு அறக்கட்டளை மூலமாக இவை வெளியிடப்பட்டுள்ளது. விந்தன்
அவர்களை செறிவாக இந்நூல்களில் அறிமுகம் செய்துள்ளஅவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இவ்விரு நூல்களிலிருந்தும் இங்கொன்றும், அங்கொன்றுமாய் சிலவற்றைமட்டும் எடுத்துவைக்க முயல்கிறேன்.

முற்போக்கு இலக்கிய ஆசான் பேரா.க.சிவத்தம்பி 1962களில் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றி ஒரு ஆய்வு நூலை எழுதுகையில்… ‘விந்தன்தான் எதார்த்த வாழ்க்கையின் மனிதர்களை நேரடியாகப் பதிவு செய்த தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளிகளில் முக்கியமானவர்‘. எனப்பதிவு செய்தார். அதற்குப் பின்புதான், தமிழ் இலக்கிய உலகம் விந்தனைப் பற்றியும், அவரது படைப்புகள் குறித்தும் மீள்பார்வை செய்தது.

1916-ல் காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த நாவலூரில் பிறந்து, சென்னை சூளைப்பட்டாளத்தில், தொழிலாளர்கள் நிறைந்த குடிசைப்பகுதியில் தன் வாழ்க்கையை அச்சுத் தொழிலாளியாகத் தொடங்கினார் விந்தன்.

சிறிய அச்சகங்களில் தொடங்கிய அவரது பத்திரிகைப் பணி தமிழக நீதிக்கட்சி ஏடான தமிழரசு, சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி கதிர் வரை நீண்டது. புத்தகப்பூங்கா வரையில் அச்சுக்கோர்த்தும் படைப்புலகில் குழந்தை இலக்கியம், சிறு
கதை, புதினம், கட்டுரைகள் என பன்முகத்தன்மையில் தன்னை அவர் ஈடுபடுத்திக் கொண்டார்.

சக தொழிலாளியான ராஜாபாதர் நட்பும், தமிழரசு இதழ் உரிமையாளர் டாக்டர் மாசிலாமணி முதலியாரின் தமிழ்ப்பயிற்சியும், கல்கி அவர்களின் அரவணைப்பும், கவிஞர் தமிழ்ஒளி, செ.து.சஞ்சீவி போன்றோரின் நட்பும் அவரை படைப்புலகில் பிரகாசிக்கச்செய்தன.
எழுத்துலகச் சிங்கம் என்றழைக்கப்பட்ட ஜெயகாந்தனின் ‘அடுப்பு எரியுமா? என்ற முதல் சிறுகதையை தன் சொந்த இதழான மனிதனில் எழுதவைத்தும், ‘ஒரு பிடிச்சோறு‘ என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பினை, தனது புத்தகப் பூங்கா என்கிற பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டும், தமிழ் இலக்கிய உலகிற்கு ஜெயகாந்தனை அடையாளப்படுத்தியதும் விந்தன் அவர்கள்தான்.

1920 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் சென்னப்பநாயக்கபட்டினம், சென்னை நகரமாக உருமாறத் தொடங்குகிறது. புதிய தொழிற்சாலைகள், ரயில்வேத்துறை
போன்றவற்றால் சென்னை தொழில் நகரமாக மாறத்துவங்குகையில் கிராமப்புற மக்கள் அங்கிருந்து வெளியேறி சென்னையில் தஞ்சமாகிப்போயினர்.

தங்களின் உழைப்பை மிகச்சொற்பமாக விற்கவேண்டிய அவலநிலையில், வாழ்ந்தவர்களோடு வாழ்ந்து அத்தகைய அனுபவங்களை தொடர் கட்டுரையாக, பிற படைப்புகளாக வெளி உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார் விந்தன்.
விந்தனின் எழுத்துத்தான் பிற்காலத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குடிசை மாற்று வாரியத்தை அமைக்கவைத்தது. அதன் முதல் தலைவர் அரங்கண்ணல் விந்தன் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து வைத்துக் கொண்டுதான் மாற்றங்காண முற்பட்டார். அப்படி உருவானதுதான் குடிசை மாற்று வாரியம், அதன் பின்புதான் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாயின. விந்தனின் எழுத்துக்கள் அவ்வளவு வீரியமானவை.

எந்தவொரு தொழிற்சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளாத விந்தன், தன்னை ஒரு எழுத்தாளன் என்பதைவிட, ஒரு தொழிலாளி என்பதில் பெருமை கொள்கிறேன் என்றவர், ‘வேலை நிறுத்தம் ஏன்? என்ற நூலை வெளியிட்டார்.

காதலையும், வீரத்தையும், பெண்மையையும், கற்பையும், உயர்த்திப் பிடித்திட்ட திராவிட எழுத்தாளர்கள், சங்க இலக்கியமரபுகளை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற எழுத்தாளர்கள், அடிப்படைவாத, மனுதர்மக் கோட்பாடுகளை முன்னெடுத்த எழுத்தாளர்கள் என்ற வகைமைகயில் தான் தமிழ் எழுத்தாளர்கள் வலம் வந்தனர்.ஆனால் விந்தனின் எழுத்துக்கள் இவையத்தனைக்கும் எதிர்வினைபுரியும் நெருப்பாயிருந்தது.

தமிழக பண்பாட்டுச் சூழலிலிருந்த பிற்போக்குத்தனங்கள் அத்தனையையும் கேள்விக்குட்படுத்தினார். அல்லது எதிர்க் கேள்வி கேட்டார்.சினேகிதி – என்கிற அகிலனின் நாவலில் அறுபது வயதுக் கிழவனை இருபது வயதுப் பெண் மணந்து, தொண்டூழியம் புரிகிறாள். இதனைத் தனது கடமையாக நினைத்து, அப்பெண் வாழ்கிறார் என பெருமை பேசுகிறது நாவல்.

இப்படைப்பை நேரடியாகவே எதிர்த்த விந்தன் ‘அன்பு அலறுகிறது” என்ற தன் நாவலின் மூலம் கடுமையாகச் சாடியதோடு, இது பெரும் அயோக்கியத்தனம், ஏமாற்றுவேலை என பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்காக அகிலன், விந்தன் மீது வழக்கும் தொடுத்திருக்கிறார் என்பது போன்றதகவல்களை இந்நூல்களில் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இவைகளையெல்லாம் தாண்டி சமூகவெளியில் முற்போக்குக் கொள்கைகளை ஊரெல்லாம் விதைத்தெறிந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, ஏழிசை வேந்தர் எம்.கே.டி பாகவதர்
ஆகியோரின் வாழ்க்கை வரலாறு, நேர்காணல் போன்றவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.
விந்தன் அவர்கள் எந்த அமைப்பிலும் உறுப்பினராய் இருந்த
தில்லை. இணைத்துக் கொண்டதில்லை, ஆனால் அறம் சார்ந்து
எழுதிய எழுத்தாளராகத் திகழ்கிறார்.

அந்தநிலையில் முற்போக்குத் தளத்தில் விந்தன் ஒற்றை மரமாய் இருந்திருக்கலாம்… தோப்பிற்குள்ளிருக்கும் ஒற்றை மரமாய்… நின்று, நூறாண்டு கடந்து நம்மோடு இயங்கிக்கொண்டிருக்கிறார்.

-மருதுபாரதி

விந்தன் நினைவாக சில… பதிவுகள்,
எழுதியவர் :செ.து.சஞ்சீவி, வெளியீடு :விந்தன் என்டௌமென்ட் டிரஸ்ட், 17,அருணாசலம் தெரு, செனாய் நகர் சென்னை -6000030.
பக் :104 விலை : ரூ.50/- செல்பேசி -9444145275

Leave a Reply

You must be logged in to post a comment.