கவிஞர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வார்த்தல் முறை ஒன்றை தேடுகிறார்கள். வாழ்தல்தான் கவிஞர் சண்முகத்தின் வார்த்தல். உணர்ச்சியில் சிக்கிக்கொள்ளாத கவி
தைகள். உணர்தலின் விளிம்பு தாண்டாத கவிதைகள். அறிவும் சிந்தனையும் துடிப்பும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் கவிதைகள். வாழ்வின் ஓசைகளை மட்டுமே அதிர
விட்டு நிரந்தர விடுதலை பாதையை காதில் ஒலிக்க விடுகிற கவிதைகள். கவிதையில் கவிஞனையும் மீறிகவிதையின் ஆற்றல் வெளிப்படுகிறது. கவிதைக்குள்ளாக நடக்கும் வினை கவிதையின் உள்நிகழ்வு. இந்த உள்நிகழ்வுதான் அனுபவத்தை கவிதையாக மாற்றுகிறது.

கல் சிற்பமாவது போல கவிதையை கவனமாக வாசித்து வரும்போது செங்கொடிச் செல்வன் பி.எஸ்.ஆர் வர்க்க பேதங்களை சுட்டுகிற அடையாளத்தோடு தொடங்கு
கிறது.

காவிரிக்கும் பி.எஸ்.ஆருக்கும் என்ன ஒற்றுமை? இருவரும் பிறந்தது கன்னடம்
சிறந்தது தஞ்சை…

காவிரிக்கும் பி.எஸ்.ஆருக்கும் என்ன வித்தியாசம்?…
தஞ்சை மண்ணை வளமாக்கியது காவிரி… மனிதனை வளமாக்கியது
பி.எஸ்.ஆர்…
இப்படிதான் கவிதையின் முழு பகுதியும் பிஎஸ்ஆரின் செயலாக்கத்தையும் ஊமையாய் கிடந்த வறிய மக்களையும் செயலூக்கம் பெற வைத்த எல்லாப் புள்ளிகளையும் இணைக்கிறது. கிராமத்து ஏழை மக்களுக்கு அதிர்வை உண்டாக்கி அறிவை தன் உலைக்களத்திலேயே தனக்கான கருவியாய் தூண்ட செய்தபி.எஸ்.ஆரின் தனித்த மொழி, வார்த்தைகள் கவிதை உணர்வின் விளிம்பிலிருந்தே எழுகின்றன.

அடிமைத்தனத்தின் அடையாளத்தை தூக்கி எறி…
மரக்காலில் சோறு வாங்காதே…
வாழைப் பட்டையில்
நீர் குடிக்காதே…
பொதுக் குளத்தில்
இறங்கிக் குளி…
கோவிலுக்குள்
புகுந்து போ….
இடுப்பில் வேட்டியை
இறக்கிக் கட்டு …
தோளிலே
துண்டைத் தொங்க போடு…
காலிலே
செருப்பைப் போட்டு நட…
இதுதான் கீழத் தஞ்சையில் பி.எஸ்.ஆர் ஏற்படுத்திய புரட்சிப் பிரளயம். இவைகளை ஏட்டில் அடைத்துவிட எவராலும் முடியுமா என்று கவிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆயிரம் பக்கங்கள் அல்ல. ஐயாயிரம் பக்கங்களில் கூட அவரின் ஈடுஇணையற்ற பங்களிப்பை அடைக்க முடியாது. பி.எஸ்.ஆர் தொடங்கிய கீழ தஞ்சை மாவட்ட உழைப்பாளி மக்களின் நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் அளப்பரியது. ஆனாலும் கவிஞர் அவரின் இந்திய விடுதலை போராட்டத்திலிருந்து கர்நாடகம் கடந்து தமிழகம் தாண்டி கீழ தஞ்சையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்ட நிகழ்வுகளை சுருக்கமாக அதுவும் கவிதை வடிவில் சுட்டிக்காட்டியிருப்பது பெருமைக்குரியது.
கீழ தஞ்சை மாவட்ட மக்களோடு அவர் வாழ்ந்து போராடி அவர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களுடனே இருந்து மரணமுற்ற வரலாறு ஒரு தனி அத்தியாயம். அந்த அத்தியாயத்தை புதிய முயற்சியாக கவிஞர் மா.சண்முகம் வெறும் 23பக்கங்களில் எல்லா நிகழ்வுகளையும் தொட்டு விவரித்துள்ளது ஆச்சரியம். இது எல்லாவற்றிற்கும் மேலாக கவிதை வடிவில் சிறு புத்தகமாக வெளியிட்டிருப்பது புதிய முயற்சி. இந்த புதிய முயற்சிக்கு முனைப்பு காட்டி பி.எஸ்.ஆர் நினைவு நாளையொட்டி வெளியிட்டது பெரும் சிறப்பு.

கவிஞர் மா.சண்முகம் ஒரு ஓய்வுபெற்ற தமிழாசிரியர், பி.எஸ்.ஆரை அடக்கம் செய்த திருத்துறைப்பூண்டி மண்ணில் வசிப்பவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொருளாளர், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலர், 1992-ல் ஆசிரியருக்கு ஆசிரியர் எனும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் உரையாற்றி சிறப்புச் சேர்த்தவர்.

2014-ல் திருவாரூரில் நடைபெற்ற கலை இலக்கிய இரவில் இவர் எழுதிய பனிச்சூடு எனும் கவிதை நூல் கவிஞர் நந்தலாலா அவர்களால் வெளியிடப்பட்டது. அதே 2014-ல் தமிழக தமிழாசிரியர் கழகத்தால் தமிழ்மாமணி விருது பெற்றவர். இப்படி பன்முக பரிமாணங்களை கொண்ட கவிஞர் பி.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த குறிப்பை புதிய முயற்சியாக கவிதை வடிவில் வெளியிட்டிருப்பது அனைவருக்குமே பெருமை சேர்க்கிறது.

-ஐ.வி.நாகராஜன்

செங்கொடிச் செல்வன் பி.எஸ்.ஆர்
ஆசிரியர் : கவிஞர் மா.சண்முகம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை
பக்:23 விலை: ரூ.20/-

Leave a Reply

You must be logged in to post a comment.