திருப்பூர்,
அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், பாரம்பரிய பண்பாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பாக முழு நாள் தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை சிஐடியு மாவட்டப் பொருளாளர் டி.குமார் தொடக்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன், மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், பனியன் சங்க உதவித் தலைவர் கே.காமராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பால்ராஜ், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகி ரோஸ்மேரி உள்ளிட்டோர் பேசினர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமலாக்கவும், 20 சதவிகித ஊதியத்தை இடைக்கால நிவாரணமாக வழங்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், பிற திட்டப் பணிகளை செய்ய வலியுறுத்துவதைக் கைவிடவும், 45வது இந்திய தொழிலாளர் கவுன்சில் முடிவுகளை அமலாக்கவும் வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் எஸ்.சுந்தராம்பாள், மாநிலப் பொருளாளர் எம்.பாக்கியம் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக போராட்டத்தை நிறைவு செய்து வைத்து அரசு ஊழியர் சங்க மாநில முன்னாள் செயலாளர் அ.நிசார் அகமது பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில் பேருந்து போக்குவரத்து முடங்கியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் நடந்தே வந்து கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் எல்லம்மாள் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: