அரியலூர்:

அரியலூரில் இளம் பெண் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகிளி. இவரது கணவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் குடும்ப வறுமைக் காரணமாக ராஜகிளி மற்றும் அவரது மகள் நந்தினி(18) ஆகியோர் கட்டிட தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இதில் நந்தினிக்கும் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன்(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் 26-ம் தேதியன்று நந்தினி மாயமாகிவிட்டதாக காவல்துறையில் ராஜகிளி புகார் அளித்துள்ளார். இதற்கிடையே நந்தினியை அவருடன் பழகிய மணிகண்டன் கடத்தி சென்றிருக்கலாம் எனவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மணிகண்டன் தனக்கும் நந்தினி மாயமானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தததை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சனியன்று கீழமாளிகை கிராம மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக சிலர் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் பார்த்த போது பெண்ணின் சடலம் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் கிடந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சடலமாக கிடந்தது காணாமல் போன நந்தினிதான் எனபது தெரியவந்தது. இதனையடுத்து நந்தினியின் உடலை அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்து முன்னணியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நந்தினியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும், இதற்கு அவரது நண்பர்கள் உதவியதாகவும் இருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் மணிவண்ணன், மற்றொரு மணிகண்டன், ராஜதுரை, வெற்றிச் செல்வன் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.