பிரதமர் நரேந்திர மோடி உயர்மதிப்பு பணத்தாள்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்படும் என்று
அறிவித்து ஒரு மாதத்திற்குப் பின்னர், டிசம்பர் 9ஆம் தேதி, பல்கலைக்கழகமானியக் குழுவின்
செயலாளர் ஜஸ்பால்சிங் சாந்து டிசம்பர் 6ஆம் தேதி அனுப்பப்பட்ட தனது முந்தைய கடிதத்தை
நினைவூட்டி மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், விட்டிய சக்சரத்தா அபியான் (Vittiya Saksharata Abhiyan – விசாகா) என்றழைக்கப்படுகின்ற நிதிக்கல்வியறிவு பிரச்சாரத்தினை உயர்கல்வி நிறுவனங்களில் நடத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார். அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அனைத்து மாநில உயர் கல்வி செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் 2016 டிசம்பர் 12 முதல் 2017 ஜனவரி 12 வரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதை, மிகவும் அவசரம் என்ற உணர்வினைக் கொண்டிருந்த அந்தக் கடிதத்தில் நினைவுபடுத்தியிருந்தார்.

மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின்
துணைவேந்தர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆகியோர் இது குறித்து
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சாந்து கேட்டுக் கொண்டார். இந்த விஷயத்தில் தங்களது தனிப்பட்ட கவனத்தினைச் செலுத்த வேண்டும் என்றும் இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளத்தில் எத்தனை பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். டிஜிட்டல் கண்காணிப்பு அறிக்கை ஒன்றினை அனைத்து நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று இந்தப் பிரச்சாரத்திற்கான இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இவ்வாறான டிஜிட்டல் பிரச்சாரத்தினைச் செய்ய வேண்டும் என்பது யாருடைய சிந்தனையில் விளைந்தது என்பதை ஊகிப்பவர்களுக்கு பரிசுகள் எதுவும் உண்மையில் அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு அமைச்சகமும் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவானது மோடியின் அறிவிப்பிற்கு பின்னரே தோன்றியிருக்க வேண்டும்.

மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருக்கும் இந்தப் பிரச்சாரம் குறித்த விவரங்கள் மிகவும் தெளிவாக நவம்பர் 8 அறிவிப்பிலிருந்து ஆரம்பித்து பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி
செல்லுகின்றன. அரசாங்கம் மேற்கொண்டுள்ள சமீபத்திய முடிவுகள் மிகப் பெரிய நிதிப் புரட்சியின் கூரான முனையில் இந்தியாவை நிறுத்தியிருக்கிறது என்று அந்த இணையதளத் தகவல் கூறுகிறது.

கறுப்புப்பணத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பொருளாதாரத்தை டிஜிட்டலாக்குவது என்ற உயர்ந்த நோக்கத்திற்காக பல்கலைக்கழகங்களின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பைத் தருமாறு எந்தவொரு விவாதமும் இல்லாமல் சர்வாதிகாரமான முறையில் அறிவுறுத்துவது என்பது மிகுந்த அதிர்ச்சியினை அளிப்பதாக இருக்கிறது.

ஆட்சியில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பல்கலைக்கழகங்கள் இருக்கின்றனவா அல்லது தங்களது ஆணையின் கீழ் நடப்பவையாக உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து சிறிதளவு கூட சிந்தித்ததாகத் தெரியவில்லை.

”பணத்தினை வாங்குபவர்கள் மற்றும் செலுத்துபவர்களை தங்களது பண மாற்றத்திற்காக டிஜிட்டல் முறையிலான பொருளாதாரத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதற்கு தூண்டுவதற்கும், ஊக்குவிப்பதற்கும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள இளைஞர்கள்/மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் இந்தப் பிரச்சாரத்திற்குத் தலைமையேற்று இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விரும்புகிறது” என்பது அந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

”வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள்ளாக வளாகத்தில் நடைபெறக் கூடிய அனைத்து
பரிமாற்றங்களையும் மாற்றம் செய்வதன் மூலம், பணமில்லா வளாகமாக தங்களது நிறுவனங்களை மாற்றுவதற்கான திட்டங்களை கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் எல்லோரும் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த இணையதளம் சொல்கிறது. தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தங்களது பகுதியில் வசிக்கும் மக்கள் ஆகியோர் டிஜிட்டல் முறைக்கு மாறுவதற்கு ஆசிரியர்களும், மாணவர்களும் ஊக்குவிக்க வேண்டும். கடை உரிமையாளர்களும், வியாபாரிகளும் பணமில்லா நிலைக்குச் செல்வதற்காக, தேசிய சேவைத் திட்டம் (NSS), தேசிய மாணவர் படை (NCC) போன்ற அமைப்புகளில் உள்ள மாணவத் தொண்டர்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணமதிப்பிழப்பு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார விளைவுகளினால் ஏழைமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை வெட்கக்கேடானதாக இருக்கிறது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. ஒவ்வொரு மாணவரும் பத்து வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று கூறப்படுவதைச் சுட்டிக் காட்டும் இந்திய மாணவர் சங்கம், எல்லா வளாகங்களும்
பணமில்லா நிலையினை நோக்கிச் செல்ல வேண்டும் என்று கூறுவது கள யதார்த்தங்களைப் பற்றிய அறிவின்மையையே காட்டுகிறது என்றும், இன்றிருக்கும் நிலையில் கிராமங்கள்/சிறு நகரங்களிலிருந்து வரும் மாணவர்கள் தங்களது கட்டணத்தை இந்த முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் தனது அறிக்கையில் இந்திய மாணவர் சங்கம் தெரிவித்திருந்தது. மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில், வங்கி மற்றும் ஏடிஎம் வரிசைகளில் நிற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

பல்கலைக்கழகத் தன்னாட்சி
நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டசபைகளால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள்,
அடிப்படையில் நிர்வாகம் மற்றும் கல்வி குறித்து தன்னாட்சி மிக்கவையாக இருக்கின்றன. மேலே இருந்து வருகின்ற நிர்வாக அல்லது கல்வி ரீதியிலான கட்டளைகளின் மூலமாக
பல்கலைக்கழகங்களின் மீது நடைபெறுகின்ற குறுக்கீடுகள் ஒன்றும் புதியவை அல்ல என்றாலும் அண்மைக்காலங்களில் இது அடிக்கடி நடப்பதாக மாறிவிட்டது.

2015ஆம் ஆண்டில் தெரிவு முறை பாடத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பாடங்கள் பல்கலைக்கழகமானியக் குழுவால் அமைக்கப்பட்ட குழுக்களால் வடிவமைக்கப்பட்டு பல்கலைக்கழகங்களின் மீது திணிக்கப்பட்டன.

அண்மைக்காலமாக, பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் சோதனைக்களங்களாக மாற்றப்பட்டு விட்டன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு தலித் ஆராய்ச்சி மாணவரின் தற்கொலையில் துவங்கி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் வரையிலும் அது தொடர்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் நாள் பல்கலைக்கழகமானியக் குழுத் தலைவருக்கு மனிதவளத்துறை அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தில் நிதி மேலாண்மையினை அதிகரிக்கும் வகையில் விதிகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகல் அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்த உத்தரவானது மத்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FEDCUTA) உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கண்டனத்திற்கும் உள்ளானது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிரானதாகவும், பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி மீது தாக்குதல்களை நடத்துவதாகவும் இந்தக் கடிதம் இருப்பதாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (JNUTA) தெரிவித்தது. பல்கலைக்கழக அமைப்புகளைச் சரிவரப் பராமரிப்பதில் தவறும்பட்சத்தில்
கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்குள்ளாக நேரிடும் என்ற அச்சுறுத்தலுக்கு பல்கலைக்கழகச் செயற்குழுவால் நியமிக்கப்படுகின்ற பதிவாளர் மற்றும் நிதி அதிகாரி ஆகியோரை ஆளாக்கி, அவர்களைப் பல்கலைக்கழக அமைப்பிற்கு வெளியில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கி இருப்பதாகவும் JNUTA குற்றம் சாட்டியது.

நிலைநாட்டப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளிலிருந்து விலகி, நிர்வாகக் குழு
உள்ளிட்ட மற்ற பல்கலைக்கழக அமைப்புகளின் கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக கூட்ட நிகழ்ச்சிநிரல் குறித்து மனிதவளத்துறை அமைச்சகத்துக்கும், பல்கலைக்கழகமானியக் குழுவிற்கும் முன்கூட்டியே நன்கு தயார் செய்து மத்திய பல்கலைக்கழகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் கூட்ட நிகழ்ச்சி நிரலை தக்க பரிசீலனை செய்து ஒழுங்கமைப்பாளரின் கருத்துக்களுடன் அமைச்சகம் பதிவு செய்து வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்றும் இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் என்பது பாராளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது, அது ஒரு அரசுத்துறை அல்ல என்பதால், பல்கலைக்கழகத்தை அமைச்சகம் இயக்க முடியாது என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்தது. நிதி மேலாண்மை என்ற சாக்கில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தின் உள்ளடக்கங்களும், தொனியும் பல்கலைக்கழகங்களின் மாண்பினைக் குறைப்பதாகவே இருக்கிறது.

ஆன்லைன் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது என்ற பல்கலைக்கழக முடிவை ஏற்க மறுத்து,
ஆஃப்லைன் தேர்வுகளை நடத்தச் சொல்லி மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியதால் 2016 மே மாதம் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆர்.எல் ஹங்லூ, இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தினார். ஆன்லைன் தேர்வு குறித்த முன்மொழிவு பற்றி அமைச்சகத்துடன் விவாதிக்கப்பட்டதாகவும், மோடியின் டிஜிட்டல் இந்தியா கருத்தோடு இது ஒத்துப் போவதாகவும் தெரிவித்த ஹங்லூ, பல்கலைக்கழகத்தின் தன்னாட்சியில் அமைச்சகமானது தலையிடுவதாகத் தெரிவிக்கிறார்

தொடர்ந்து வரும் குறுக்கீடுகள் அன்றாட நிர்வாகத்தில் நேரடியான மற்றும் மறைமுகமான தலையீடுகள் என்பது மட்டுமே அரசின் தலையீட்டில் நடைபெறும் நிகழ்வுகளாக இல்லை. கடந்த இரண்டாண்டுகளாக பண்பாட்டுத் தேசியவாதம் என்ற போர்வையில் தேசியவாதக் கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. 2016 மார்ச் மாதம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், ஓய்வுபெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரை சிறப்புரையாற்ற அழைத்ததைக் காரணம் காட்டி மாநிலத்தின் ஆளுநர் கலந்து கொள்ள மறுத்ததன் விளைவாக, ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இடைநீக்கத்திற்கெதிராக எழுந்த எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாததால், இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

தேசியவாதத்தை முன்னிறுத்தி வலதுசாரி சித்தாந்த மாணவர் இயக்கங்களின் மூலமாக 2016ஆம் ஆண்டில் ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சனைகள் செப்டம்பர் 21 அன்று மஹேந்தர்கார் மாவட்டத்தில் உள்ள ஹரியானா மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் தொடர்ந்தன.

காவல்துறையினரால் சிறைக்குள் நடத்தப்படும் கற்பழிப்பு, மரணம் குறித்த மகாஸ்வேதா தேவியின் கதையைத் தழுவிய நாடகம் ஹரியானா மத்திய பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் துறையின் ஆசிரியர்கள், மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடமிருந்து இதற்கான முன்அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும், அந்த நாடகம் பரவலாக பலராலும் பாராட்டப்பட்ட போதிலும், பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு சிலர் இந்திய ராணுவத்திற்கெதிராக அந்த நாடகம் இருப்பதாக கூக்குரல் எழுப்பினர்.

வளாகத்திற்குள் எழுந்த இந்த எதிர்ப்பு நன்கு திட்டமிடப்பட்டதாக இருந்தது. பல்கலைக்கழக
வளாகத்திற்குள் முன்னாள் ராணுவ வீர்ர்கள் குவிக்கப்பட்டு, இரண்டு ஆசிரியர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அழுத்தம் தரப்பட்டது. முன்னாள் ராணுவ வீர்ரர்கள் அதிகமாக வசிக்கும் பக்கத்து கிராமங்களில் இந்த நாடகத்தின் வீடியோ பதிவுகள் சுற்றுக்கு விடப்பட்டன. நாடு தழுவிய அளவில் ஆசிரியர் இயக்கங்கள் இந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகத் திரண்டனர்.

பல்கலைக்கழக வளாகம் என்பது கடினமான கேள்விகளை பயம், தண்டனைகள் எதுவும் இல்லாமல் அறிவுசார் வெளிப்படைத்தன்மையுடன் விவாதிக்கக் கூடிய இடமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து மூன்று பேராசிரியர்களும் ஹரியானா மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பினர்.

எனினும், பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இனிமேல் இவ்வாறான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், மீறினால் பணிவிதிகளின் கீழ் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் ஏதோ ஒரு சில இடங்களில் நடப்பவையாக இல்லை.

சோனிபட் மாவட்டத்தில் உள்ள BPSமகளிர் பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஒரு குழு விவாதத்தில் கலந்து கொள்ளவிருந்த ஜக்மதி ஜங்வான் என்பவரது பெயர் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டது.

இந்த மாற்றம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஜக்மதி ஜங்வானுக்கு கூட்டத்திற்கு முந்தைய இரவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமானது பிற அமைப்புகளுடன் இணைந்து பல்கலைக்கழகத்தின் உரிமை மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததோடு, இதுகுறித்து பல்கலைக்கழகமும், முதலமைச்சர் அலுவலகமும் விளக்கம் தர வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்னிறுத்தியது. ஒன்றும் பயனில்லை. மாநில பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தங்ளுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்றம் வரை சென்றுள்ளதை இங்கே நினைவு கூற வேண்டியுள்ளது.

அச்சுறுத்தல் தந்திரோபாயங்கள்
நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கும் கூட மிரட்டல்கள் விடப்படுகின்றன. மேற்கு உத்தர
பிரதேசத்தில் முசாபர்நகர், பூதான தாலுகாவில் உள்ள தனது கிராமத்தில் அக்டோபர் 6 அன்று
நடைபெற்ற ராம் லீலா இசைப்பாட்டு நாடகத்தில் பங்கேற்க திரைப்பட நடிகரான நவாஜுதீன்
சித்திக்கிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விடுமுறையில் தனது கிராமத்தில் ஓய்வெடுத்து
கொண்டிருந்த அந்த நடிகர் நடக்கவிருந்த நாடகத்தில் நடிப்பதற்கு தனது விருப்பத்தினை ஏற்கனவே அந்த அமைப்பளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பதும்,

சிவசேனா விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொண்ட சிலர் நாடகத்தில் ஒரு முஸ்லீம் நடிப்பதற்கு வாய்ப்பு தரக் கூடாது என்று அமைப்பாளர்களை எச்சரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்கள் நாடக மன்றம் (IPTA) என்ற அமைப்பு அக்டோபர் 5ஆம் தேதி இந்தூரில் மாநாடு
ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த முக்கிய படமாகக்
கருதப்படும் கரம் ஹவா என்ற திரைப்படத்தின் இயக்குநரான M.S.சத்யுவிற்கு இந்திய-பாகிஸ்தான் உறவு குறித்து பேசுவதற்கான எந்த உரிமையும் இல்லை என்று கூறிக் கொண்டு பாரத் ஸ்வாபிமான் மஞ்ச் என்ற அமைப்பு இந்த மாநாட்டின் போது கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தது. இந்த மூன்று நாள் மாநாட்டினைத் துவக்கி வைத்த சத்யு துல்லிய தாக்குதல்கள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி மற்றும் உரையாடல்கள் நடக்க வேண்டியதை வலியுறுத்தியும், பாகிஸ்தானில் இருந்து வருகின்ற கலைஞர்களுக்குத் தடைவிதிப்பது குறித்தும் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பழமையான முற்போக்கு நாடக இயக்கங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்திய மக்கள் நாடக மன்றம் (IPTA) காவல்துறை, ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையினைத் தூண்டும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கமும் (RSS) தனது அறிக்கையை வெளியிட்டது.

பல்கலைக்கழகக் கட்டமைப்புகளின் மீது குறுக்கீடுகள், கலாச்சார தேசியவாதத்தினைத் திணிப்பது, நாட்டின் நலனுக்காகச் செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. அவையனைத்தும் உயர் மட்டத்திலிருப்பவர்களிடமிருந்து வெளிப்படுபவையாகவே இருக்கின்றன. தேசிய நலன்களுக்காக என்று கூறி பிரதமரின் அலுவலகமே நேரடியாக டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னிறுத்தியிருப்பதன் மூலம் பிற அமைச்சகங்களின் தன்னாட்சியானது ஆடிப் போயிருக்கின்ற வேளையில், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி பற்றிப் பேசுவது உண்மையில் வேடிக்கையானதுதான்.

நன்றி: http://www.frontline.in/cover-story/campus-control/article9456751.ece?homepage=true
தமிழாக்கம்:
முனைவர்.தா.சந்திரகுரு,விருதுநகர்

Leave A Reply