சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் லேபர் மார்கெட் பகுதியில் வேலைக்காக காத்து நிற்கும்
அன்றாடங்காய்ச்சிகளான முறைசாராத் தொழிலாளர்களிடம் நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட போது வெடித்து விழுந்தன வார்த்தைகள் பலரிடமிருந்து. ஆற்றாமையால் சிலரிடமிருந்து அழுகையும் வந்தது. ஆனால் ஒருவரிடமிருந்து கூட பாரத் மாதா கி ஜே முழக்கமோ, ராணுவ வீரன் சாகிறான்; நாட்டிற்காக நான் செத்தால் என்ன தப்பு என்ற தேசப்பற்று கருத்துக்களோ கேட்கவில்லை. பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்குப் பின்னர் தனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தான் அடைந்து வரும் இன்னல்களைச் சொல்லும் மனதை உறுத்துகின்ற பாலுவின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெரும்பாலானவர்கள் இதுவரையிலும் கேட்டிராதவைகளாக கூட இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மை இன்றைய சூழலில் நிதர்சனம். களத்தில் இருக்கும் எவராலும் மறுக்க முடியாதது.

“தொடர்ந்து பத்து நாட்களாக வேலை கிடையாது. வேலையில்லாததன் காரணமாக சாப்பிடாமல் இருப்பதாகச் சொன்னார். வெறும் டீயும், தண்ணியும் மட்டுமே குடிச்சிகிட்டு பத்து நாளா உயிர் வாழ்ந்துகிட்டு இருக்காரு.அவர் நம் முன்னாடி வைக்கிற கேள்விகளுக்கெல்லாம் நம்மகிட்ட பதிலே கிடையாது” என்று நடப்பதற்கே மிகவும் சிரமப்படுகின்ற வயதான கட்டிடத் தொழிலாளியான பாலு கூறியதாக நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த சாரதா அந்த நிகழ்ச்சியின் போது கூறினார். இந்த நிகழ்ச்சித் தொகுப்பு நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சியில் 2017 ஜனவரி 8 அன்று ஒளிபரப்பப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் “என்ன பண்ணச் சொல்றெ? எப்படியாவது ஒண்ணு… நேத்தெல்லாம் இங்க வந்து உக்காந்துட்டுதான் போனேன்.

கஞ்சித் தண்ணி கூட, வடிச்ச தண்ணி கூட இல்ல. வேலைக்கும் போக விடமாட்டேன்கிறாங்க. வேலைக்கு தப்பித்தவறி போனா செல்லாத நோட்டுதா கொடுக்குறாங்க. அத வாங்கி வந்து நான் என்ன பண்றது? காச்சி குடிக்கிறதா? மூணு மாசத்து வாடகை கொடுக்கல. அது வேற.. மூணு மாச வாடகை மூவாயிரத்து இருநூறு ரூபாய் தரணும். மூணு மாசத்து வாடகை. நான் என்ன என் தலையில அடிச்சிகிட்டு போகட்டா? தள்ளாத வயசு. முடியாத வயசு. புள்ளைகளே கிடையாது. பொண்ணுங்களும் கிடையாது. பொண்டாட்டிகாரி தான் இருக்குது. கெழ்வி ஒண்ணு உக்காந்துகிட்டு இருக்குது வூட்டில. அங்கிருந்து இங்க வந்து ஒரு நாலு ரூபா சம்பாதிக்கலாம்னு வந்தேன். இங்க நாலு ரூபா சம்பாதிக்கிறதுக்கு வழி கிடையாது. தள்ளாத ஆள விட்டுட்டு, விட்டு கடாசிப்புட்டு இதுகள்லாம் ஓடிப் போயிடுதுக” என்று சொல்லும் பாலுவிடம் வேலை கிடைக்கவில்லை, கூட இருப்பவர்களிடம் தனது வேலைக்காக போட்டி போட முடியவில்லை, யாரும் உதவி செய்யவில்லை என்ற ஆதங்கம் மேலெழுந்து ஒலிக்கிறது. 

ஏழ மக்க சாகறதா? என்ற கேள்வியினை எழுப்பும் அவர் “பணக்காரக, இந்த பணக்காரங்க
பொழச்சுகிறாங்க. நான் எப்படி பொழைக்க முடியும். நான் எந்த விதத்தோட பொழைச்சுகிறது
சொல்லுங்க பாக்கலாம். ஏழு நாளாகுது. என் அங்கத்தில ஒரு பங்கு போயிருச்சி. நான் யார்கிட்ட போயி சொல்றது? எந்த தெய்வத்துகிட்ட போயி சொல்றது? எந்த தெய்வம் இன்னக்கி சோறு போடும்? ஆனா இங்கதான் போகணும் என் உயிரு. ஒருத்தன் செத்தான். எதுனால செத்தான்? துன்னச் சோறு இல்லாத, கட்ட ஆடை இல்லாத, வேலை இல்லாத, நொள்ளப்பட்டு அவனால முடியாத காலமாயிட்டான் கெழவன். இதுனாலதான் செத்தானே தவுர வேற எதுனாலயும் சாகல. வெள்ள சீட்டு இருக்குது அந்தா அந்தக் கடையில. வாங்கிட்டு வந்து படிக்கத் தெரிஞ்சவன வச்சி இன்ன மாதிரி வில்லங்கம் இதுனாலதான் இவன் செத்தான் வேற காரணம் எதுவுமே கெடையாது அப்படின்னுட்டு வெள்ள பேப்பர்ல எழுதி வச்சிட்டு நான் சாகிறது சாகிறதுதாங்க” என்று சாகும் முடிவினைத் தொட்டு இறுதியாக ஒரு வேண்டுகோளுடன் நிற்கிறார். மனச்சாட்சி உள்ளவர்களைச் சாகடிக்கும் அந்த வேண்டுகோள், “இந்த மக்கள இனிமே சாகடிக்காதீங்க. இந்த மக்க மனச நோகடிக்காதீங்க. இந்த மக்கள இனிமே கொல்லாதீங்க இந்த மக்க உயிர வாங்காதீங்க” என்பதுதான்.

”மக்கள் இத வந்து மொதல்ல ஒத்துக்கிட்டாங்க. இது வந்து நாட்டுக்கு நல்லதுக்காகதான்னு அப்படீன்னு சொல்லி ஒத்துக்கிட்டாலும் அது வந்து தங்கள ரொம்பக் கடுமையாகப் பாதிக்குது. தங்களுடைய வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது, வாழ்க்கையையே அது வந்து பாதிக்குது. இப்ப என்னோட பிள்ளைக்கு பத்து நாளா சாப்பாடு கொடுக்க முடியல. நான் இருந்து என்ன பயன். அப்படீன்னு கேள்விகளை முன்வைக்கிறாங்க” என்று வருத்தப்படும் தொகுப்பாளினி சாரதா இவ்வாறு முடிக்கிறார் “நாம  அவங்ககிட்ட போகும் போது, அவங்க கேட்கக் கூடிய கேள்விகள் மிக நியாயமானதாக, மிகச் சரியானதாக இருந்தாலும் கூட அதற்கு நம்மிடம் பதில் இல்லை. ஆனால் அவர்கள் முன்வைக்கக் கூடிய இந்தத் தீர்வை நாம் எப்படி ஏத்துக்கப் போறோம், அவங்க சொல்லக் கூடிய அவர்களது வார்த்தைகளுக்கு நாம் என்ன மதிப்பளிக்கப் போறோம்கிறது தெரியவில்லை”. மோடியின் காதுகளுக்கு எட்ட வேண்டிய கருத்துக்கள்.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதம் என்பது உயர்கல்வி மாணவர்களுக்கு தேர்வுக்காலம்.

அந்த நேரத்தில் மோடியிடமிருந்து வந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு அவர்களுக்கு சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தியது.

வீட்டு வாடகை கொடுப்பதற்கு முடியாமல் பல மாணவர்கள் இன்னலுக்குள்ளாகினர். வாடகைப் பணத்தினை, வீட்டு உரிமையாளர்கள் பணமாகத்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் வரையிலும் வாடகைக்காக மட்டுமே பணத்தாள்கள் தேவைப்பட்டன. இதில் பழைய 500, 1000 ரூபாய் பணத்தாள்களில் நவம்பர் 8க்கு முன்பாக முதல் தேதியில் கொடுத்த வாடகைப் பணத்தைக் கூட திரும்பத் தந்து அவற்றை புதிய பணத்தாள்களாக மாற்றிக் கேட்ட உரிமையாளர்களும் இருந்தார்கள். ஏடிஎம்மிலிருந்து இரண்டாயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில், வாடகை கொடுப்பதற்காக மட்டுமே மூன்றிலிருந்து நான்கு தடவை வரிசைகளில் நின்று பல மணி நேரங்களை, பல நாட்களைத் தொலைக்க வேண்டிய கட்டாயம்.

மாணவர்கள் பாடு உண்மையில் திண்டாட்டமானதுதான். அவர்கள் தேர்வுகளை எப்படி எழுதியிருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள காத்திருப்போம். முறைசாராத் தொழிலாளர்கள், மாணவர்கள் என்று அனைவருக்கும் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ள இவ்வாறான நிலைமைகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று வரையிலும் தொடருகின்ற சூழலில், மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் அறிவிப்பு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வந்திருக்கிறது.

”கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க ஏதுவாக டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், விட்டிய சக்சரத்தா அபியான் (Vittiya Saksharata Abhiyan – விசாகா) என்றழைக்கப்படுகின்ற நிதிக்கல்வியறிவு பிரச்சாரத்தினை உயர்கல்வி நிறுவனங்களில் 2016 டிசம்பர் 12 முதல் 2017 ஜனவரி 12 வரையில் ஒரு மாத காலத்திற்கு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தேன். கடந்த இருபத்தைந்து நாட்களில், தேர்வுக் காலம் என்பதையும் கருத்தில் கொள்ளாது, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் வகையில் தொண்டர்களாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் பதிவு செய்துள்ளனர்.

 இதுவரையிலும் ஆயிரம் கல்வி நிறுவனங்களே பதிவு செய்திருக்கின்றன. இதுவரையில் கலந்து கொள்ளாத பிறரும் இதில் இணைந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சாரத்தின் வழியாக சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு இந்த விசாகா பிரச்சாரம் மேலும் ஒரு மாதத்திற்கு பிப்ரவரி 12 வரையிலும் நீட்டிக்கப்படுகிறது” என்று நாட்டின் உயர்கல்வி  நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் ஜவடேகர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களது நிலைமையினை அறிந்து கொள்ள கருத்துக் கேட்ட நியூஸ்18 சாரதா அடைந்த துயரமே தாங்க முடியாதிருக்கும் போது, பாதிப்படைந்திருக்கிறவர்களிடமே சென்று நாட்டின் நலனிற்காக பணமதிப்பிழப்பு குறித்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற பிரச்சாரத்தைச் செய்வது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை பாரதியஜனதா கட்சியினர்தான் கண்டு பிடிக்க வேண்டும். அரசியல்ரீதியாகவோ, நிர்வாகரீதியாகவோ எவரையும் கலந்தாலோசிக்காமல் மிகவும் ரகசியமாக எடுத்த இந்த முடிவினை எடுத்த தைரியசாலிகள் அதனை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் சிரமங்களைக் களைவதற்காக, இந்த முடிவினை அமல்படுத்தியதால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒன்றுமறியாத அப்பாவி மக்களிடம் இது குறித்த பிரச்சாரம் செய்வதற்கு மாணவர்களைத் துணைக்கு அழைக்கும் மனப்பாங்கினை என்னவென்று சொல்வது? ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. கட்டாயம் செய்தாக வேண்டும். பிரச்சாரங்களைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும்.

ணமதிப்பிழப்பு தொடர்பாக இதுவரையிலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஏராளமான பொய்கள் குறித்து மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அமைச்சகத்தின் பிரச்சாரத்தினை முறியடிப்பதற்கு அனைத்து வகையிலான பிரசாரங்களையும் மேற்கொள்ள வேண்டும். 

– முனைவர்.தா.சந்திரகுரு .விருதுநகர் 

Leave A Reply