புதுதில்லி, ஜன. 13 –
விவசாயிகளைப் பற்றியும், இந்திய விவசாய நிலைமை பற்றியும் பிரதமர் நரேந்திர மோடியின் கேலிக் கூத்தான பேச்சுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய வேளாண்மை பாதித்துவிட்டதாக குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர்: இந்த குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடியாகும் வகையில் இந்த ஆண்டின் சம்பா பருவத்தின் விளைச்சல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் உயர்ந்திருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் கூறியிருந்தார்.

உண்மைக்கு மாறான தரவுகளை கூறுவதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு துயரத்தின் பிடியில் தவிக்கும் விவசாயிகளை மோடி ஏளனப்படுத்தியுள்ளார் என அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அம்ரா ராம், பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது:

இந்திய விவசாயம் ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேலும் இந்திய விவசாயத்தைத் துயரத்தின் பிடியில் சிக்க வைத்துவிட்டது.

உண்மை நிலை என்ன?

இதனால் இந்திய விவசாயிகளும் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவில் தங்களின் வருமானத்தை இழந்துள்ளனர். நாட்டின் விவசாய உற்பத்தி மகசூல் என்பது மிகப்பெருமளவில் சரிந்துள்ளது. வட மாநிலங்களில் சம்பா பருவத்திற்கான விதைப்பும் தாமதமாகியுள்ளதால் விவசாய உற்பத்தி மேலும் சரிவை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக நாட்டின் கோதுமை உற்பத்தி ஏற்கனவே பெருமளவில் சரிந்துள்ளது.

இந்நிலையில் விளைச்சல் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டுமெனவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வங்கிக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; குறிப்பாக, ஏழை மற்றும் சிறுகுறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் துயரத்தைப் போக்கிட அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, இந்திய விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அவமானப்படுத்தி, காயப்படுத்தியுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கடந்த இரண்டு மாத காலமாக பெரும் பகுதி விவசாயிகள் தங்களது வருமானங்களை இழந்துள்ளனர். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். விற்பனையும் பெருமளவில் சரிந்தன. பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருள்கள் பல்லாயிரக்கணக்கான டன்கள் அழுகிப் போயின. சம்பா பருவ அறுவடையும் பெருமளவில் சரிவை நோக்கியுள்ளன.

விவசாயத்தை நம்பி வாழும் விவசாயத் தொழிலாளர்கள் பெருமளவில் வேலையிழந்துள்ளனர். விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலையால், அவர்கள் பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடன்களைத் தள்ளுபடி செய்க!

ஆனால் இந்த உண்மைக்கு மாறாக, இந்திய விவசாயம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் இந்திய விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 60 நாட்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும் இதைத் தவிர அடுத்த மூன்று மாதங்களுக்கு 3 கோடி விவசாயக் கடன் அட்டைகள் “ரூபே” அட்டைகளாக மாற்றித் தரப்படும் என்றும் சிறு-குறு விவசாயிகள் மின்னணு முறை வாயிலாக மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்றும், குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயக் கடன் வழங்குவதற்காக நபார்டு வங்கிகள் மூலம் கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் சலுகைகளை அள்ளி வழங்கியுள்ளதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளின் கட்டமைப்பு, ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சீர்குலைக்கப்பட்டுள்ளது.

எனவே மோடியின் இத்தகைய வெற்றுப் படாடோப அறிவிப்புகள், விவசாய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சிறிய அளவில் கூட துணை புரியாது. வாழ்விழந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க அவர்களது வங்கிக் கடன்கள் முழுவதையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

தவறான மதிப்பீடு

6 சதவீதம் விவசாய உற்பத்தி சம்பா பருவத்தில் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தவறான மதிப்பீட்டின் அடிப்படையிலான தரவுகளை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மொத்த கோதுமை உற்பத்தி என்பது கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அவர் குறிப்பிட்ட அதே தரவு மதிப்பீட்டில், வேண்டுமென்றே சில தரவுகளை சுட்டிக்காட்டிடத் தவறியுள்ளார். நடப்பாண்டு உரப் பயன்பாடு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளும் கடும் வறட்சியினால் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட பருவமழை நாட்டின் சில பகுதிகளில் கூடுதலாக கிடைத்ததால் கூடுதலாக பயிரிடப்பட்டது. குறிப்பாக பருப்பு வகைகள் கூடுதலாகவே பயிரிடப்பட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையிலும் கூட, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் விவசாயிகள் பலமுனைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளையில், கோதுமை விதைப்பு காலதாமதமாகியுள்ளதால் உற்பத்தி பெருமளவில் சரியும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

42 சதவீதம் அதிகரித்துள்ள விவசாயிகளின் தற்கொலை

இதை மறைத்து, பிரதமர் மோடி, விவசாயிகளின் மீது கருணையில்லாமல் பேசியிருக்கின்ற இதேகாலத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புதிய விபரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. 2015ம் ஆண்டில் மட்டும் 12,602 விவசாயிகள் கடன்தொல்லையால், வறட்சியால், இனி நம்மால் மீள முடியாது என மனமுடைந்து தற்கொலை செய்துள்ளனர். பாஜக ஆட்சியில் கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளின் தற்கொலை 42 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை என்பது இதற்கு முன்பு இல்லாத அளவில் 4,291 ஆக அதிகரித்துள்ளது. பாஜக ஆளும் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் 6,535 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 51.88 சதவீதமாகும். பாஜக தலைமையிலான மாநில அரசுகளின் ஆளும் மாநிலங்களில் மட்டும் விவசாயிகளின் தற்கொலைகள் 7,723 ஆக உயர்ந்துள்ளது. இது 61.28
சதவீதமாகும்.

மேற்குவங்க மாநிலத்தில் விவசாயத் தற்கொலைகள் ஒன்று கூட நடைபெறவில்லை என்று மோசடியான விபரத்தையும் அளித்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலைகள் உரிய முறையில் வழக்குகளாக பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.

நாடு முழுவதுமே விவசாயிகள் மிகக் கடுமையான துயரத்தின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், விவசாய நெருக்கடி என்ற நிலை இந்தியாவில் இல்லை என்ற பிரதமரின் பேச்சு அவர்களை ஏளனப்படுத்தும் கேலிக்கூத்தாக உள்ளது.

எனவே இந்திய விவசாயிகளை நெருக்கடியிலிருந்து மீட்கவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வங்கிக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் வரும் ஜனவரி 19 அன்று பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்திட வேண்டுமென அகில இந்திய விவசாயிகள் சங்கம் நாடு முழுவதுமுள்ள தனது கிளைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

 

Leave A Reply