புதுதில்லி, ஜன. 13 –

வழக்கத்திற்கு மாறாக, பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கும், மேலும், ஐந்து மாநிலத் தேர்தல் நடக்கும் காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, அந்த முறையை மாற்றி விட்டது.

2017-ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையை பிப்ரவரி முதல் நாளே தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. இதில், சில கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை, இடம்பெறச் செய்யவும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் வரை, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை மனத்தில் வைத்தே பாஜக இந்த வேலையில் இறங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய பாஜக அரசு, ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகே நிதிநிலையறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு தனது முடிவை இதுவரை மாற்றிக் கொள்ளவில்லை.

இதையடுத்து, எம்.எல். ஷர்மா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். நிதிநிலையறிக்கையை பிப்ரவரியில் தாக்கல் செய்யக் கூடாது; எப்போதும்போல மார்ச் இறுதியில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதற்கு முன்னதாக நிதிநிலையறிக்கை தாக்கல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், பாஜக-வின் தேர்தல் சின்னமான தாமரை சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இவ்வழக்கில் வலுவான ஆவண ஆதாரங்களைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரர் எம்.எல். ஷர்மாவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply