புதுதில்லி, ஜன. 13 –

இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயக் நடத்திவரும் ‘இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை’க்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்திய இளைஞர்கள் ‘ஐ.எஸ்’ பயங்கரவாத இயக்கத்தில் இணைவதற்கு, உதவி செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில், ஜாகிர் நாயக்கின் அறக்கட்டளைக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது.

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை அரசு எடுத்தது.

இந்நிலையிலேயே, தடையை எதிர்த்து, இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை வழக்கு தொடர்ந்துள்ளது. தடைக்கான காரணங்களை மத்திய அரசு முறையாக தெரிவிக்கவில்லை என்று அறக்கட்டளை தனது மனுவில் கூறியுள்ளது.

வெள்ளியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடைக்கான அனைத்து காரணங்களும் கூறப்பட்டுள்ளன, இதற்கு முன்பாகவே கூட அமைப்பின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், இதே விவகாரத்தை நீதித் தீர்ப்பாயம் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், தடை அறிவிப்பு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜனவரி 17-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

 

Leave A Reply