சென்னை, ஜன. 13 –

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், ஒன்பது விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2017-ஆம் ஆண்டில் விருதுகளைப் பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, ‘திருவள்ளுவர் விருது’க்கு புலவர் பா. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தந்தை பெரியார் விருது’ பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், ‘அண்ணல் அம்பேத்கர் விருது’ மருத்துவர் இரா. துரைசாமிக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல, ‘பேரறிஞர் அண்ணா விருது’க்கு கவிஞர் கூரம் மு.துரை, ‘பெருந்தலைவர் காமராசர் விருது’க்கு டி. நீலகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

‘மகாகவி பாரதியார் விருது’ முனைவர் ச. கணபதிராமன், ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’ கவிஞர் கோ. பாரதி, ‘தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது’ போராசிரியர் மறைமலை இலக்குவனார், ‘முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விஸ்வநாதம் விருது’ மீனாட்சி முருகரத்தினம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளை, ஜனவரி 15-ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்குகிறார்.

விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

மேலும், இவ்விழாவில் வயது முதிர்ந்த, 50 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகளும் அளிக்கப்பட உள்ளன.

 

Leave A Reply