– பூஜா மெஹ்ரா

முதல் 50 நாட்கள் ஓடிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி, ரகசியங்களை கைவிட்டு, பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் சாதனைகளை பட்டியலிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தக்கணமே கறுப்புப் பணத்திற்கும் லஞ்சத்திற்கும் எதிரான யுத்தம் உச்ச நிலைக்குச் செல்லும் எனத் தோன்றியது. நாடு மீண்டும் 1991தருணத்திற்கு காத்திருந்தது, 1991-ல் ஒரு நெருக்கடியைத் தொடர்ந்து, மன்மோகன்சிங், மிகவும் துல்லியமாக பொருளாதாரத்தை மற்றொரு பாதையில் கொண்டு சென்றார்.

முதல் 50 நாட்கள் கடந்து விட்ட நிலையில், திருவாளர் மோடி, புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது இது குறித்து எதுவுமே இல்லை. அவர் மூத்த குடிமக்களுக்கு, பெண்களுக்கு, விவசாயிகளுக்கு மற்றும் சிறு வியாபாரிகளுக்கு, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் யார் மோசமாக பாதிப்படைந்தார்களோ அவர்களுக்கு சில நிவாரணங்களை அறிவித்தார். சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பதிலாக மோடி நிவாரணத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

இயற்கை அழிவுகள், விபத்துகள், பேரிடர் காலங்கள் அல்லது பொருளாதார மந்த நிலை போன்ற சமயங்களில்தான் நிவாரணங்கள் வழங்கப்படும். அரசின் நடவடிக்கையை சமாளிக்க நிவாரணம் வழங்கப்படுவது அரிது. ஒரு கொள்கை முடிவு எடுக்கப்பட்டதன் தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கப்படுகிறது என்றால், அது சரிவர யோசித்து எடுக்கப்பட்ட முடிவாக இருக்க முடியாது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை தாக்குப் பிடிக்க நிவாரணம் வழங்குவது பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இல்லை, மாறாக, அது ஒரு பின் யோசனையாக அமலாக்கப்பட்டது.

மூடுமந்திரமாக இருப்பதும், பல நிவாரணங்கள் அறிவிக்கப்படுவதும், இந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கை திட்டமிட்டபடி செல்லவில்லை என்பதைக் காட்டுகிறது. சொல்லிக் கொள்ளும் படியோ அல்லது மதிப்பிடக் கூடிய அளவிலோ எந்த சாதனைகளும் இல்லை. எனவே, அரசு மேலும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதற்கு உறுதுணையாக சில சலுகைகளை அறிவித்துள்ளது. அது ஒரு தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளவோ அல்லது தோல்வியை ஒப்புக் கொள்வதை தள்ளிப்போடவோ இத்தகைய சலுகைகளை அறிவித்துள்ளது. இது ஒரு தவறு என்பது நிச்சயம் நிரூபணமாகும்.

அரசாங்கம், தான் மட்டுமே அறிந்த காரணங்களுக்காக, இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை எப்படி நவம்பர் 8க்கு முன் திட்டமிட்டது என்பதையோ அல்லது முடிவுகளின் அடிப்படையில், சாதனைகளையோ வெளியிடத் தயங்குகிறது.

இந்த ஒட்டு மொத்த நடவடிக்கையும் நீண்ட கால பொருளாதார நன்மைகளுக்கு மிகவும் தேவையான நடவடிக்கை என்றும், அதற்கு விலையாக குறுகிய கால வலிகள் வேதனைகள் இருந்தால் கூட, இது தேசத்தைக் கட்டி எழுப்பும் நடவடிக்கை என்றும் அறிவிக்கப்பட்டது. கஷ்டங்களும் சில இழப்புகளும் இருந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் கறுப்புப் பணம் மற்றும் லஞ்சம் ஒழிக்கப்படுவதற்காக பொறுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. தற்போது பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் விளைவாக அந்த இலக்குகளை அடைவதற்கான காலக் கெடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கான அறிவிப்பு, ஆபத்து இருக்கிறது என்று புரிந்தும், அதனைச் சமாளித்துவிடலாம் என்று ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவா அல்லது சற்றும் யோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவா என்பதைப் புரிந்து கொள்ள நாம் எதிர்காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதன் விளைவுகள் நம் கண் முன்னே விரியத் துவங்கிவிட்டன.

ரிசர்வ் வங்கிக்கு வந்த கடிதம்

இதற்கு அத்தாட்சி இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து வரத் துவங்கிவிட்டது. தகவல் அறியும் சட்டத்தின் கீழான கேள்விகளுக்கு சிலவற்றிற்கே பதில் அளிக்கப்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றக் குழுவின் மூலமாகவே பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிந்துக் கொள்ள சாத்தியம் இருக்கிறது.

ரிசர்வ் வங்கிக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் நவம்பர் 7 அன்று வந்திருக்கிறது. இந்தக் கடிதம் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை புழக்கத்திலிருந்து திரும்பப் பெற ஆலோசனை அளித்திருந்தது. இதன் நோக்கமாக மூன்று விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது : கள்ளநோட்டு புழக்கத்தைப் மட்டுப்படுத்துதல், பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது மற்றும் கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்துவது ஆகியன. இந்த விஷயங்களை உடனடியாக ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுமத்தின் (போர்டு ஆப் டைரக்டர்ஸ்) ஒப்புதலுக்கு வைக்க அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

அடுத்த நாள் மதியமே போர்டு கூடியது. இந்தக் கூட்டத்தில் மிகச் சிலரே கலந்து கொண்டிருந்தனர். காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால், மிக மிக முக்கியமான நவம்பர் 8 ஆம் தேதி கூட்டத்தில் அரசுப்பணியில் இல்லாத இயக்குநர்கள் 10 பேரில் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், துணை ஆளுநர் ஆர்.காந்தி மற்றும் எஸ்.எஸ்.முந்த்ரா, நிதிஅமைச்சகத்திலிருந்து செயலர் நிலையில் இரண்டு அதிகாரிகளான சக்திகாந்த தாஸ், அன்ஜூலி சிப் துக்கால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு முன் இருந்த ஆலோசனை, நாட்டில் புழக்கத்தில் உள்ள 80 சதவீதப் பணத்தைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்பதாகும். ரிசர்வ் வங்கியின் அச்சகங்களில் புதிதாய் அடிக்கப்படும் 2000 ரூபாய் தாள்கள் போதுமான அளவில் அச்சடிக்கப்படவில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டே ரிசர்வ் வங்கியின் போர்டு இந்த ஆலோசனைக்கு தனது ஒப்புதலை வழங்கியது. சில மணி நேரங்கள் கழித்து, அன்று மாலையே, மாஸ்டர் மோடி தனது மந்திரிசபையின் ஒப்புதலைப் பெற்றார். அன்று நடுநிசிக்குப்பின் இந்தியர்களின் கைகளில் இருந்த 80 சதவீதத்திற்கும் அதிகமான பணம் வெறும் காகிதமாக மாறியது.

ரிசர்வ் வங்கியிடமிருந்து நவம்பர் 7ஆம் தேதிக்கு முன்னர் குறிப்புகளையோ அல்லது கருத்தையோ அல்லது தகவல்களையோ அரசு கேட்டுப் பெறவில்லை. இந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தில் எத்தகைய சீர்குலைவுகளை, பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து விவாதிக்க ரிசர்வ் வங்கிக்கு கிடைத்த அவகாசம் ஒரே ஒரு நாள் மட்டுமே. இந்த நடவடிக்கைகளுக்கான செலவு, அதன் காரணிகள் ஆகியவற்றைப் பற்றி சீர்தூக்கிப் பார்க்க, இந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு மாற்று நடவடிக்கை உண்டா என்று பார்க்க அனைத்திற்கும் கிடைத்த அவகாசம் ஒரு நாள் மட்டுமே.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் கோப்புக் குறிப்புகள் வேறு மாதிரி நிரூபிக்காவிட்டால், இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவல்ல ; அவசர கதியில் எடுக்கப்பட்டது என்பதையே காட்டும். இதற்கு எந்த திட்டமும் இல்லை. மாறாக, வெறும் மனம் போன போக்கில் எடுக்கப்பட்ட முடிவாக அமையும்.

பல முனைகளில் தோல்வி

அரசாங்கம் இந்த நடவடிக்கையின் பலன்கள் என்று எதையும் தெரிவிக்கவில்லை. எனவே, குறைந்தபட்சம் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வெளிப்படையாக விளக்க வேண்டும். அரசு இந்திய மக்களுக்கு தான் கொடுத்த சிரமங்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளது. அது பின்பற்றிய தன்முனைப்பான வழிமுறைகள், நேர்மையான – சாதாரண இந்தியக் குடிமகனிடம் இந்த நடவடிக்கைக்கு அது கொடுத்த முன்னுரிமை ஆகியன பற்றி தெளிவுபடுத்த வேண்டும். பதுங்கு குழிக்குள் மறைந்து கொள்வதால் போர்களில் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அதே போல போர்க்களத்தில் சரியான திட்டமில்லாமலும் வெற்றி கிடைத்ததில்லை.

பணமதிப்பு இழப்பு பரிசோதனையானது, அரசு இயந்திரத்தின் அபாரமான ஊழல் திறனையும், சாதாரண மக்களிடம் கொஞ்சமும் பரிவு இல்லாமல் இருப்பதையும், இந்தியாவின் சமூக பொருளாதார சிக்கல்களை புரிந்து கொள்ளாமல்இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. சாதாரண மற்றும் முழுமையான வெள்ளந்தியான மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் அவர்களின் கவுரவத்தை மதிப்பது ஆகிய எல்லாவற்றிற்கும் துரோகம் இழைத்து விட்டது.

எளிய மக்கள் பணத்தட்டுப்பாட்டை தைரியமுடன் எதிர்கொண்டனர்; வங்கிகளிலும், ஏடிஎம் களிலும் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக நின்றனர்; சிலர் நாட்கணக்கில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் பணம் கிடைக்கவில்லை. ஆனால் அதேசமயம் ரெய்டு செய்யும் அதிகாரிகள் வங்கிகளில் நிற்போருக்கு கிடைக்க வேண்டிய ரூ.2000 தாள்களை கட்டுக்கட்டாக நாடு முழுவதும் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பதிலிருந்து நீண்ட தூரம் விலகிப் போய் விட்டது. நான்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் பணியிடை நீக்கம் மற்றும் வங்கி அதிகாரிகள் கைது ஆகியவை வெளிப்படுத்துவது என்னவெனில் இந்த நடவடிக்கை புதிய கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது – அது பணநோட்டு (கறுப்பு) சந்தை.

பிரதமரின் தனிப்பட்ட செல்வாக்கு இந்த கொள்கை முடிவுகளில், திட்டமிடலில் மற்றும் அதன் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள தோல்விகளை ஈடு செய்ய முடியாது. கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிரான யுத்தம் ஏற்கனவே தோல்வியைத் தழுவியுள்ளது. ‘புதிய தேசத்தை உருவாக்க இந்த அமைப்பையே முழுமையாக மாற்ற வேண்டியுள்ளது; இதற்கு குறுக்கு வழிகள் கிடையாது.

டிசம்பர் 31ஆம் தேதி மோடியின் பேச்சிற்குப் பிறகு தாராளமயத்தின் புதிய அலைகளுக்கான நம்பிக்கைகளே கூட வற்றிப் போய்விட்டன. பிப்ரவரி 1ஆம் தேதி வெளிவர இருக்கும் பட்ஜெட்டில் வலி தரக்கூடிய சீர்திருத்த நடவடிக்கைகளை களைய வேண்டியிருக்கும். மக்களை கவரும் அம்சங்களை அவர்கள் அறிவிக்கக்கூடும். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் அனுபவம், திரு.மோடி (இந்திய பொருளாதார) அமைப்பை முதல் முறையாக எதிர்கொண்டதைக் காண்பிக்கிறது.

-தமிழில் : க. ஆனந்தன்
நன்றி : தி இந்து (ஆங்கிலம்), ஜனவரி 11, 2017

 

Leave A Reply