கோவை, ஜன,

பாரம்பரிய பண்பாட்டு உரிமைகளை தடைபோட்டு தடுக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்தை நடத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை எட்டிமடையில் வெள்ளியன்று தடையை  மீறி   ரேக்ளா  ஆர்வலர்கள்  ரேக்ளா ஊர்வலம் நடத்தினர்.

தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் திருநாளில் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சுவிரட்டு  போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றது என்றால் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில், பீட்டா தொடர்ந்த வழக்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை நடத்துவதற்காக மத்திய அரசும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டக்களத்தில் இறங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக எட்டிமடை  பகுதியில்  ஐல்லிக்கட்டு  மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா வண்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தமிழர்களின் பண்பாடு, பரம்பரியத்தில் கைவைப்பதை  ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்தை நடத்த அனுமதி வழங்கவில்லை எனில், தடையை மீறி நடத்துவோம் என அவர்கள்
தெரிவித்தனர். இதையடுத்து தடையை மீறி  ஐம்பதுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகளில்  நான்கு கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா ஊர்வலம் நடத்தப்பட்டது. எட்டிமடை பகுதியில் துவங்கிய ரேக்ளா ஊர்வலம் கிராம பகுதிகள் வழியாக சென்று மீண்டும் எட்டிமடை பகுதியை அடைந்தது.
தடையை மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ரேக்ளா  ஊர்வலம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave A Reply