மதுரை, ஜன.13-
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமலாக்கத்திற்கு முன் சேவை வரி விகிதத்தை அதிகரிக்கக் கூடாது; ஜி.எஸ்.டி கவுன்சிலில் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால் வாக்கெடுப்பு நடத்தி ஜி.எஸ்.டியை வரும் நிதி ஆண்டு முதல் அமலாக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.இரத்தினவேல், தலைவர் என்.ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

ஏற்கனவே திட்டமிட்டப்படி 01.04.2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமலாக்க இயலாவிட்டால் சேவை வரி விகிதம் வரும் மத்திய பட்ஜெட்டில் 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

2003-ம் ஆண்டு 5 சதவீதமாக அறிமுகப்படுத்தப்பட்ட சேவை வரி விகிதம் கடந்த பல ஆண்டுகளாக பலமுறை அதிகரிக்கப்பட்டு 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில், சேவை வரியை எளிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில்- சேவை வரி மீது கூடுதலாக இரண்டு தலைப்புகளில் விதிக்கப்பட்ட 0.36 சதவீத கட்டணங்களை ரத்து செய்துவிட்டு – மொத்தம் 12.36 சதவீதமாக இருந்த சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டு, 01.06.2016 முதல் இரண்டு வித செஸ் கட்டணங்களுடன் மீண்டும் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தாமல், சேவை வரி விகிதத்தை மேலும் 3 சதவீதம் உயர்த்துவதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.

உற்பத்தி நிறுவனங்கள் கலால் வரி விதிப்பிற்குட்படுவதால் சேவை வரியை உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக்கொள்ள இயலும். ஆனால் வணிகர்களுக்கு கலால் வரி இல்லாத காரணத்தால் செலுத்தும் சேவை வரியை தாங்கள் விற்கும் சரக்குகளின் அடக்க விலையுடன் சேர்க்க வேண்டியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமலாவதற்கு முன்னதாகவே சேவை வரி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டால் அது வணிகர்களை மிகவும் பாதிக்கும்; பல்வேறு வகையான சேவைகளுக்கான கட்டணங்களையும் அதிகரிக்கச் செய்து அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும். பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுவர்.

2017 ஏப்ரல் முதல் மிகவும் முற்போக்கான, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் தொழில் வணிகத் துறை மீது இரட்டை ஆளுமை கூடாது என்ற அடிப்படையில், அவ்வரியைச் செலுத்தும் தொழில் வணிகத் துறையினர் மீது வரி விதிப்பு செய்யும் அதிகாரத்தை, மத்திய அரசின் கலால் மற்றும் சேவை வரிச் சட்டத் துறை அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்துறை அதிகாரிகள் எவ்வாறு பிரித்துக் கொள்வது என்ற பிரச்சனையில் ஜி.எஸ்.டி கவுன்சில் ஒன்பது முறை கூடிய பின்னரும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பது வருந்தத்தக்கது.

பாதிக் கிணறு தாண்டிய நிலையில் இப்பொழுது ஜி.எஸ்.டி அமலாக்கம் இருக்கிறது.

எனவே 01.04.2017 முதல் ஜி.எஸ்.டி அமலாக்கப்படுவதற்கு மாநில அரசுகள் அனைத்தும் ழுழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தொழில் வணிகத் துறை சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

ஜி.எஸ்.டி அமலாக்கம் காரணமாக மாநில அரசுகளின் வருவாய் குறைந்தால் 2015-2016-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு அளித்திடும் என்று ஜி.எஸ்.டி வரிக்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ரூ. 1000, ரூ. 500 கரன்சி நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த காரணத்தால், மாநில அரசுகளின் வரி வருவாய் குறைகிறது என்று சில மாநில அரசுகள் ஏன் ஜி.எஸ்.டி அமலாக்கத்தை தடுக்கின்றன என்று புரியவில்லை.

வரும் ஏப்ரல் முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்படாவிட்டால் அது நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும். எனவே இம்மாதம் 16-ம் தேதியன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால் வாக்கெடுப்பு நடத்தி முடிவுகள் எடுத்து சரக்கு மற்றும் சேவை வரியை 01.04.2017 முதல் கண்டிப்பாக அமலாக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 

Leave A Reply