மன்னார்குடி, ஜன. 13 –

புறநகர் அல்லாத ரயில்-களின் சாதாரண பயணச் சீட்டுகளை செல்போன் மூலம் பெறலாம் என்ற புதிய திட்டம் பயணிகளை அலைக்கழிப்பதாகவும், அதனை மேம்படுத்த வேண்டும் என்றும் தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் (டிஆர்இயு) வலியுறுத்தியுள்ளது.

தட்சிண ரயில்வே ஊழியர் சங்கத்தின் உதவிப் பொதுச்செயலாளர் டி. மனோகரன், இதுதொடர்பாக தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புறநகர் ரயில்களில் செல்போன் குறுந்தகவல் பயணச் சீட்டாகவே கருதப்படுகிறது. அதில், வண்ண அடையாளங்கள் மற்றும் பயணிகளின் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை தகவல் இடம் பெறும். மேலும் குறுந்தகவலை பயணச் சீட்டாக உறுதிப்படுத்த சோதிக்கும் கருவிகள் டிக்கெட் பரிசோதகர்கள் வைத்திருப்பார்கள். ஐந்து கி.மீ. தூரத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களுக்கான பயண சீட்டுகள் பெறவும் வழி வகை செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால், தற்போது புறநகர் அல்லாத ரயில்-களின் சாதாரண பயணச் சீட்டுகளை செல்போன் மூலம் பெறும், புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இது பயணிகளை அலைக்கழிப்பதாக உள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள செல்போன் மூலம் பயணச் சீட்டு வாங்கும் திட்டத்தில், வெறும் குறுந்தகவல் மட்டுமே செல்போனுக்கு டோக்கன் போல் வரும். பின்னர், மறுபடியும் ரயில் நிலையங்களுக்கு சென்று தானியங்கி டிக்கெட் இயந்திரத்தின் முன்போ அல்லது டிக்கெட் கவுண்ட்டர் முன்போ வழக்கம் போல் வரிசையில் நின்று, அந்த குறுந்தகவலைப் பயணச் சீட்டாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவசரப் பயணம் மேற்கொள்பவர்கள், வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதற்கு நேரமில்லாதவர்கள், மாறி மாறி ரயில்களில் பயணம் மேற்கொள்பவர்கள், புறநகர் அல்லாத பயணங்களை நாடுபவர்கள் அதிகம்.

அப்படியிருக்கையில், செல்போன் மூலம் தகவலைப் பெற்று, மீண்டும் வரிசையில் நின்று அதை டிக்கெட்டாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டம், ஒரு பயணிக்கு இரட்டை வேலையாக மாறி விடுகிறது.

மேலும், பயணிகள் ஸ்மார்ட் போன் மூலம் அதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்திருப்பதுடன், குறைந்தபட்சம் ரூ. 100 வேலட்டில் பணம் வைத்திருக்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தை நிச்சயம் தோல்வியை நோக்கி கொண்டு சேர்த்து விடும்.

எனவே, குறுஞ்செய்தி மூலம் புறநகர் ரயில் பயண டிக்கெட் பெறும் திட்டம் போல், புதிதாக இப்போது அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தையும் மேம்படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் கருதுகிறது.

இவ்வாறு மனோகரன் கூறியுள்ளார்.

 

Leave A Reply