புதுதில்லி, ஜன. 13-
எம்பில், பிஎச்டி மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை ஒழித்துக் கட்டும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.

எம்பில், பிஎச்டி மாணவர் சேர்க்கை குறித்து பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 2016 மே 5 தேதியிட்ட புதிய அறிவிக்கையை தற்போது மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிக்கை சமூகநீதிக்கு எதிரானது. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையை ஒழித்துக் கட்டும் வகையிலான அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த புதிய தாக்குதல் உயர்கல்வி மீதான பாஜக அரசின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே என இந்திய மாணவர் சங்கத் தலைவர் வி.பி.ஷானு, பொதுச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் கூறியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த புதிய அறிவிப்பாணை திணிக்கப்பட்டது. இதனால் நாட்டில் சமூக ரீதியாக பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கான எம்பில், பிஎச்டி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததால், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதேபோன்ற அனுபவம் கேரள பல்கலைக்கழகத் துணைவேந்தரால் (மத்தியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் காலத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த புதிய முறை செயல்படுத்தப்பட்டது. இத்தகைய நடைமுறையால் எம்பில், பிஎச்டி மாணவர் சேர்க்கை இடங்கள் கடுமையாக குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யுஜிசியின் அறிவிப்பு இதுவரை இருந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, தேர்வுக்கான அடிப்படை, மாணவர் சேர்க்கை விதிகள் மற்றும் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்களுக்கான தகுதி அளவுகோல்களை கடுமையானதாகவும் இறுகியதாகவும் மாற்றியுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், உயர்கல்வி நிலையங்களில் இரண்டு கட்ட செயல்பாட்டு முறை மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும் என்பதை யுஜிசி தெளிவுபடுத்துகிறது. நுழைவுத்தேர்வு தகுதியை, 50 சதவீத மதிப்பெண்களைக் கொண்டு தகுதிப்படுத்துகிறது.

நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் 50 சதவீதம் ஆராய்ச்சி முறையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். 50 சதவீதம் குறிப்பிட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

கல்விநிலையத்தின் அல்லது பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் துறை ஆராய்ச்சி குழு முன்பாகவும் தான் மேற்கொள்ள விரும்பும் ஆராய்ச்சி நோக்கம் குறித்து வாய்மொழி தேர்வின் மூலம் விவாதித்து சமர்ப்பிக்க வேண்டும்.

முன்மொழியப்பட்ட ஆராய்ச்சி திறன் பங்களிப்பு குறித்தும் மற்றும் அவர் முன்மொழிந்த ஆராய்ச்சி துறையில் மேலும் கூடுதலான அறிவு தேடலுக்கு பொருத்தமானவரா என்பதை கல்வி நிறுவனம் அல்லது பல்கலை. நிர்வாகம் மதிப்பீடு செய்யும்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (மாணவர் சேர்க்கை குறித்த அடிப்படை தரவுகளை ஆய்வு செய்யும்) பேரா.அப்துல் நபி கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி ஆய்வுக்கு பின் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. உண்மையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மற்றும் பின்தங்கிய சமூக பின்னணியை கொண்டுள்ளவர்களுக்கு வாய்மொழி தேர்வில் மதிப்பெண்கள் 30 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அனுபவ தரவுகள் மூலம் சாதியின் அடிப்படையிலான பாகுபாடும் ஒடுக்குமுறையும் மற்ற பல்கலைக்கழகங்களிலும் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் புதிய மாணவர் சேர்க்கையான யுஜிசியின் அறிவிப்பின் அடிப்படையில் 100 சதவீதம் வாய்மொழி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை தீர்மானிக்கப்பட உள்ளது.

உண்மையில் நுழைவுத் தேர்வு மூலம் அனைவருக்குமான தகுதி மதிப்பெண் 50 சதவீதம் என்பது அனைத்து பிரிவினருக்குமானதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலாராக, பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு இதில் அநீதி இழைக்கப்படுகிறது. பாகுபாடு காட்டப்படுகிறது. எனவே பொருத்தமான மாணவர் சேர்க்கைக்கான தேர்வு முறை சட்டப்பூர்வமான நடவடிக்கையாக்க வேண்டும். அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற சட்டப்பூர்வமான இடஒதுக்கீடு கொள்கை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் ஆராய்ச்சி மேற்பார்வை தகுதி தொடர்பாகவும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது.

ஆராய்ச்சி மேற்பார்வையாளராக, இணை மேற்பார்வையாளராக இருக்கும் எந்த ஒரு பேராசிரியரும் எந்த கட்டத்திலும் மூன்று எம்பில் மாணவர்களுக்கு மட்டும் ஆய்வு வழிகாட்ட முடியும். அதேபோன்று எட்டு பிஎச்டி ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்ட முடியும். இணை பேராசிரியர் ஆராய்ச்சி மேற்பார்வையாளராக அதிகபட்சமாக இரண்டு எம்பில் மாணவர்களுக்கும் மட்டுமே வழிகாட்ட முடியும். ஆறு பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்டியாக இருக்க முடியும். ஒரு உதவி பேராசிரியர், ஒரு எம்பில் மாணவருக்கு மட்டுமே வழிகாட்டியாக இருக்க முடியும் நான்கு பிஎச்டி ஆய்வாளர்களுக்கு மட்டுமே வழிகாட்ட முடியும் என்று புதிய கட்டுப்பாடுகளும் வரையறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுப் பல்கலைக்கழகங்களில் எம்பில் மற்றும் பிஎச்டி ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறையும் நிலை உருவாகியுள்ளது.

எனவே இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு இத்தகைய புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு அரசிதழில் வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

எனவே நமது ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைமுறையிலிருக்கும் மாணவர் சேர்க்கை விதிமுறைகள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. எனினும் அந்த மாற்றம் பின்தங்கிய சமூகத்து மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை சட்டப்படி அங்கீகரிக்கின்ற மாற்றமாகவும் இருக்க வேண்டியுள்ளது. பல்கலை. மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமையை அழிக்கும் முறையை அனுமதிக்க முடியாது என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உயர்கல்வி மற்றும் பொதுப் பல்கலைக்கழகம் மீதான இந்த தாக்குதல் என்பது சமூக நீதிக்கு எதிரான ஆர்எஸ்எஸ் – பாஜகவின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலானது. எனவே இத்தகைய புதிய யுஜிசியின் அறிவிப்பினை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழக கிளைகள் போராட்டங்களை நடத்திடவும் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.சானு, பொதுச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Leave A Reply