விருதுநகர், ஜன.13-

பொங்கல் போனஸ் அறிவிக்காமல் ஏமாற்றிய தமிழக அரசின் செயலால் சத்துணவு ஓய்வூதியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.மாயமலை விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

2017-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டது. சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள வருவாய் கிராம – ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு வந்தது.

இதுபோல சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து முறையீடு செய்து வந்தோம். சமூக நலத்துறை அமைச்சரும் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தொகுப்பூதியத்தில் பணியாற்றி 1980ல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கர்ணம், ஹெட்மேன்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசுப்பணியில் நேரடியாக ஈடுபடாத பொது மக்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு உண்டு. ஆனால் பொங்கல் போனஸ் கோரிக்கைக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக போராடும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
எனவே, உடனடியாக மறுபரிசீலனை செய்து 2017ஆம் ஆண்டு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கிட வேண்டும்.
இவ்வாறு மாயமலை கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

You must be logged in to post a comment.