புதுதில்லி, ஜன. 13 –

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ‘ஹஜ்’ பயணத்துக்கான மானியத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்துக்கு இந்தியாவிலிருந்து, கடந்த ஆண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் சென்று வந்தனர். இந்த ஆண்டு, 1 லட்சத்து 70 ஆயிரத்து 520 பேர் ‘ஹஜ்’ பயணம் வரலாம் என்று சவூதி அரேபியா அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இந்தாண்டு இந்தியாவிலிருந்து கூடுதலாக 34 ஆயிரத்து 500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் ‘ஹஜ்’ பயணத்திற்கு வழங்கி வரும் மானியத்தை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர இஸ்லாமியர்கள் தங்களின் முக்கியக் கடமையை நிறைவேற்றும் வகையில், ‘ஹஜ்’ பயணம் செல்வதற்கு, மத்திய அரசு நீண்டகாலமாக மானியம் வழங்கி வருகிறது. இந்த வகையில் ஆண்டொன்றுக்கு மத்திய அரசு ரூ. 650 கோடி வரை ஒதுக்கீடு செய்துவருகிறது.

அண்மையில் ‘ஹஜ்’ மானியத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், அந்த மானியத்தை படிப்படியாக குறைத்து, 2022-ஆம் ஆண்டுக்குள் அதனை இல்லாமலேயே செய்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே, உச்சநீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, ‘ஹஜ்’ பயணத்துக்கான மானியத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மானியக் குறைப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கு 6 பேர் கொண்ட மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி-யும் உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து இதுபற்றி ஆய்வு செய்து வருகிறார்.

அகில இந்திய மஜ்லிஸ்-இ- இத்திகா துல் முஸ்லிமான் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசதுதீன் உவைசி செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “மத்திய அரசு வழங்கும் ஹஜ் மானியம் முஸ்லிம்களுக்கு தேவை இல்லை; அந்த மானியப் பணத்தில் ரூ. 450 கோடி இந்திய விமான நிறுவனங்களுக்கு தான் செல்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

 

Leave A Reply