சென்னை,
உழைப்பை ஆராதிக்கும் பொங்கல் நாளில் தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அறுவடையின் துவக்கம் என்பது ஆனந்தமான ஒரு விழாவாக அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தை முதல் நாள் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாள் என்ற சிறப்பைப் பெற்ற பொங்கல்திருநாள் இயற்கையோடு மனித இனத்திற்குள்ள இயல்பான உறவின் பண்பாட்டு வெளிப்பாடாக அமைந்துள்ளது.
“சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என்று வள்ளுவரால் புகழப்பட்ட உழவுத்தொழில் இன்றைக்கு கடுமையான நெருக்கடியில் சிக்கி உழலும் தொழிலாக மாறியுள்ளது. இந்த நூற்றாண்டு காணாத அளவிற்கு தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இரு பருவமழைகளும் பொய்த்துப் போனதாலும், காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்காததாலும், பெரும்பாலான அணைகள் வறண்டு விட்டதாலும் தமிழகமே பாலைவனமாக காட்சியளிக்கிறது. சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரின்றி கருகிப்போனதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயத் தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். கால்நடைகளும் தீவனமின்றி வாடுகின்றன. கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தாமதமாக இருப்பினும் அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு அறிவித்துள்ள நிவாரணம் எந்த வகையிலும் பொருத்தமானதாக இல்லை. எனவே, விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் நியாயமான நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதோடு வேலை நாட்களையும், ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும்.
மோடி அரசு அறிவித்த 500. 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு நாட்டு மக்கள் அனைவரையும் கடும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. கார்ப்பரேட் கனவான்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை எளிய மக்களின் வாழ்க்கையை எட்டி உதைப்பதாக உள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஏற்கனவே கடும் துயரக்குள்ளாகியுள்ள விவசாயம், சிறு-குறு தொழில்கள், சிறு வர்த்தகம் என அனைத்துத் துறைகளும் மோடி அரசின் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கையோடு இயைந்த வாழ்வை அழிக்கும் வகையில் ஆறுகள், நீர்நிலைகள், கனிமவளங்கள் ஒரு சிலரின் சுயநலத்திற்காக சூறையாடப்படுகின்றன. இதில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுவது நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான அயர்வற்ற போராட்டங்கள் தான் பொங்கல் திருநாளை அர்த்தப்படுத்தும்.
தமிழகத்தில் காலம் காலமாக நடத்தப்பட்டு வந்த ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு போட்டியை இந்தாண்டும் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு அரசாணை வெளியிட்டு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளை மாட்டை நீக்கி சட்டம் இயற்றாத மோடி அரசே இந்த முட்டுக்கட்டைக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக ஏற்பட்ட இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சி வரவேற்கத்தக்கது. புதிய கல்விக்கொள்கை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளுக்காகவும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்படவேண்டும்.
கரும்பின் கணுக்களில் கனிந்திருக்கிறது நாளை குறித்த நம்பிக்கை. காய்ந்துபோன விதைகளில் மறைந்திருக்கிறது உயிரின் ஒளி. இதுவரை பூவுலகில் அனைத்தையும் சமைத்தது மனிதகுலத்தின் மகத்தான உழைப்பே. உழைப்பை ஆராதிக்கும் திருநாளான பொங்கல் நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் jதமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave A Reply