புதுதில்லி, ஜன. 13 –

2017-18-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று, ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்கெனவே பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில், வரும் ஆண்டுகளில் அது இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2016-ஆம் ஆண்டில் 17.7 மில்லியன் ஆக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 17.8 மில்லியனாகவும், 2018-ம் ஆண்டில் 18 மில்லியனாகவும் அதிகரிக்கும். இந்த 2 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் 3.4 சதவிகிதம் அதிகரிக்கக் கூடும்.

வளர்ந்து வரும் நாடுகளில் வேலையின்மை விகிதம் 3.6 மில்லியன் ஆக உள்ளது. அதே சமயம் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருக்கும் நாடுகளில் இரண்டு பேரில் ஒருவர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியா போன்ற நாடுகளில் ஐந்தில் இரண்டு பேர் வேலையில்லாமல் உள்ளனர்.

குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளில் வேலையின்மை விகிதம் பன்மடங்கு அதிகமாக உள்ளது.

இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply