திருவனந்தபுரம், ஜன.9-

“ரோஹித் சட்டம்” நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், ஜனவரி 6-8 தேதிகளில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

வரும் 2017 ஜனவரி 17 அன்று நிறுவனரீதியாக கொல்லப்பட்ட (institutional murder) ரோஹித் வெமுலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரித்திட இருக்கும் தலித்துகள், மாணவர்கள், பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

மிகவும் புத்திசாலியான தலித் பி.எச்டி.(ஆராய்ச்சி) மாணவர் ஒருவர், சமூக நீதிக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் போராடினார் என்கிற காரணங்களுக்காக, மோடி அரசாங்கத்தின் கீழான இரு அமைச்சர்கள் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் அளித்திட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக தற்கொலைக்குத் தள்ளப்பட்டது உண்மையில் நீதியையே பரிகசிப்பது போன்றதாகும்.

பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தன்னுடைய குறுகிய சித்தாந்தப் பிணைப்புகளின் காரணமாக பல்கலைக் கழகத்தின் சுயாட்சித்தன்மையை பாதுகாக்கத்தவறிவிட்டதோடு, ரோஹித் மற்றும் அவருடன் படிக்கும் சக மாணவர்களிடம் மிகவும் மோசமானமுறையில் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்துகொண்டார். அவர்கள் கல்லூரிவிடுதியிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டார்கள். கடுங்குளிரில் வெளியே கூடாரத்தில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு கேன்டீன் வசதிகள் மறுக்கப்பட்டன. பல மாதங்களாக அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகைகளையும் வழங்காமல் மறுத்துள்ளார். காவல்துறையினரைக் கொண்டும் இவ்விளைஞர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து ரோஹித்தை விரக்தியின் எல்லைக்கு விரட்டி அவர் 2016 ஜனவரி 17 அன்று தற்கொலை செய்துகொள்ள வைத்தன.

மேலும், ரோஹித் ஒரு தலித் அல்ல என்று காட்டுவதற்காக மத்திய அரசாங்கம் சகலவிதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கியது. அவர் இறப்புக்குக் காரணமானவர்கள் அனைவரையும் தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இத்தகு நடவடிக்கைகளில் அரசு இறங்கியது. ரோஹித்தை பறிகொடுத்துவிட்டு ஆதரவின்றி தையல் தொழிலாளியாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அவரது தாயாருக்கோ அல்லது அவரது குடும்பத்தாருக்கோ உதவிட மத்திய அரசாங்கமோ, தெலுங்கானா மாநில அரசாங்கமோ முன்வரவில்லை.

கல்விநிறுவனங்களில் சமூக ஒடுக்குமுறையிலிருந்தும், சாதியப் பாகுபாடுகளிலிருந்தும் மாணவர்களைக் காப்பாற்றக்கூடிய விதத்திலும், அவ்வாறான ஒடுக்குமுறை மற்றும் இழிசெயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கக்கூடிய விதத்திலும் “ரோஹித் சட்டம்” கொண்டுவர வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் தலித் அமைப்புகள் பல கோரிவருகின்றன. இக்கோரிக்கையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஆதரிக்கிறது. இத்தகையதொரு சட்டம் நிறைவேறிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் முழுமையான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(ந.நி.)

 

Leave A Reply