சென்னை, ஜன.12 –

வாகன பதிவு கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோட்டார் வாகன தொழிலாளர்கள் வியாழனன்று (ஜன.12) சென்னை அசோக்பில்லர் அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு
தொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதமாக மத்திய அரசு 2014ம் ஆண்டு சாலை பாதுகாப்புச் சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து போக்குவரத்து துறை சார்ந்த தொழிலாளர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த மசோதாவை மத்திய அரசு கைவிட்டது. இருப்பினும், அந்த மசோதாவில் இருந்த அம்சங்களை, அரசாணைகள் மூலம் மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு டிச.29ந் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆர்டிஓ அலுவலக செயல்பாடுகளுக்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் ஷேர் மற்றும் அபே ஆட்டோக்கள், லோடு ஆட்டோ, வேன், மேக்சிகேப், கால்டாக்சி, சுற்றுலா வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறை 500 ரூபாய் செலுத்தி பெறப்பட்ட வாகன தகுதிச்சான்று, இனிமேல் மாதாமாதம் 1450 ரூபாய் செலுத்தி பெறவேண்டும். 10 நாட்கள் காலதாமதமாக கூட தகுதிச்சான்று பெறலாம் என்றிருந்த காலஅவகாசத்தையும் நீக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பித்துக் கொள்ள 250 ரூபாயாக இருந்த கட்டணம் 650 ரூபாயாகவும், 175 ரூபாயாக இருந்த பர்மிட் புதுப்பித்தல் கட்டணம் 750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாகன பதிவு கட்டணம் 1750 ரூபாயிலிருந்து 3ஆயிரம ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் (தென்சென்னை) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் எஸ்.எம்.முகமது யாகூப் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அகில இந்திய சாலைப்போக்குவரத்து சம்மேளன மாநிலத் தலைவர் கே.ஆறுமுகநயினார், சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.அன்பழகன், செயலாளர் கே.தமிழ்ச்செல்வன், இ.நாகைய்யா உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply