ஓம்புரியுடன் நான் பழகிய ஒவ்வொரு நிமிடமும் மறக்கமுடியாதவை. ‘புராவர்த்தம்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய பிறகு மும்பைக்குச் செல்லும் போதெல்லாம் ஓம்புரி மும்பையிலிருக்கிறார் என்ற தைரியம் மனதிலிருக்கும். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் என்னுடன் இருப்பார். இரவில், நான் தங்கியிருக்கும் இடத்திற்கு என்னைக் கொண்டு சேர்த்த பின்னரே அவர் வீடு திரும்புவார். அந்த ஆத்ம பந்தத்தைக் குறித்து எவ்வளவு சொன்னாலும் தீராது.

முதன்முதலாக மலையாளத்தில், நான் இயக்கிய ‘புராவர்த்தம்’ என்னும் திரைபடத்தில் தான் ஓம்புரி நடித்தார். ‘புராவர்த்தம்’ என்ற திரைப்பட வேலை ஆரம்பிக்கும் முன்னர் ‘வண்ணான் ராமன்’ என்ற கதாபாத்திரம் தான் எனது மனதிலிருந்தது. தோழர். ஏ.கே. கோபாலனின் ஆத்ம கதையில் தான், ராமன் என்ற கதாபாத்திரம் எனக்கு அறிமுகமாகியது. நிலவுடைமைக்கு எதிரான உயிரோட்டமுள்ள போராட்டத்தில் பங்கெடுத்த ‘வண்ணான் ராமனை’ எந்த வரலாற்று நூலும் அறிமுகப்படுத்தவில்லை. அதனால் ராமன் கதாபாத்திரத்தின் அறிமுகம், மனம் நிறைய விவசாயிகளின் போராட்டங்களை நினைக்கத் தூண்டியது. பின்னர், சி.வி.பாலகிருஷ்ணனின் ஒரு நாவலில் ராமன் என்ற கதாபாத்திரம் உள்ளதாகக் கேள்விப்பட்டு, அந்நாவலை வாசித்தேன். அதிலிருந்து ‘புராவர்த்தம்’ திரைப்படத்தின் சிந்தனை உருவெடுத்தது. நிலவுடைமைக்கு சவால் விடும் செயலூக்கமுள்ள, அச்சமில்லாத ஒரு வாலிபனே ராமன் என்ற கதாபாத்திரம்.

அதோடு முகத்தில் அம்மைத்தழும்புள்ள ஒம்புரியைத் தேட வேறொரு காரணமும் இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவரான தோழர். சி.எச். கணாரனின் உருவமே எனது கதாபாத்திரத்தின் உருவமாக உள்மனதில் இருந்தது. சிறு புன்னகையுடன் முகத்தில் அம்மைத் தழும்புள்ள தோழர். சி.எச். கணாரன் யாரையும் வசீகரிக்கும் ஆளுமைக்கு சொந்தக்காரர். நான் மாணவனாயிருக்கும் போது நேரடியாகவே, தோழர். சி.எச். கணாரனின் தனித்துவத்தை உன்னிப்பாக கவனித்திருக்கிறேன்.

‘புராவர்த்தம்’ திரைப்படத்தின் ‘வண்ணான் ராமன்’ கதாபாத்திரத்திற்கு அதே போன்ற முகத்தோற்றம் வேண்டும் என்று நான் விரும்பினேன். ஓம்புரி ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. அவ்வாறுதான் முகம் நிறைய அம்மைத் தழும்புகள் உள்ள ஓம்புரியை நோக்கி எனது கவனம் திரும்பியது. நடிப்பில் பாவனை காட்டும் அவரது திறமை சொல்லில் விளக்கிவிட இயலாது. இயல்பில் சாதாரண மனிதனாக இருப்பவர், நடிக்கத் தொடங்கியவுடன் ஒரு பயங்கர வில்லனாக விஸ்வரூபம் எடுப்பது அற்புதப்படுத்தும் ஒன்றாகும். பெரும்பாலும் லென்ஸ்களின் உதவியோடு தான் இத்தகைய பாவமாற்றங்கள் படமாக்கப்படும். ஆனால் ஓம்புரி நடிக்கும் போது அவரது உருவமே முழுமையாக மாற்றமடையும். கதாபாத்திரமாக மாறும்போது அதுவரை பார்த்த மனிதராக தோன்றமாட்டார்.

வயநாட்டிலுள்ள திருநெல்லிக்காட்டில் தான் புராவர்த்தத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. காட்டிற்குள் டெண்ட் அமைத்துத் தான் அனைவரும் தங்கி இருந்தோம். யானை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாடும் இடம். வழிநிறைய அட்டைகள். கூர்மையான கற்கள் நிறைந்த பாறையடுக்குகள். அதொன்றும் அவருக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. ஓம்புரி பாலிவுட்டிலிருந்து வந்த நடிகர் என்ற சிறு கலக்கம் நிறைந்த உணர்வு படபிடிப்புக் குழுவினருக்கு இருந்தாலும், அதை அவர் கண்டுகொள்ளவேயில்லை. காலைக்கடன்களுக்கும் குளிப்பதற்கும் சுத்தமான ஆற்றுநீரையே உபயோகப்படுத்தினோம். அதையும் அனுபவித்து ஏற்றுக்கொண்டார். ‘ராமன்’ கதாபாத்திரம் செருப்பணியாத நபர் ஆகையால், காலையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் வந்தவுடன் ஓம்புரி தனது செருப்பை கழட்டிவிட்ட பிறகு மாலை படப்பிடிப்பு முடிவது வரை செருப்பு அணியமாட்டார்.

மொழியின் தடையையும் இல்லாததாக்கி திருநெல்லிக் காட்டின் ஆதிவாசி மக்களுடன் நட்புடன் பழக ஆரம்பித்தார்.

குழந்தைகள் அவரைக் கண்டவுடன் அவரைச்சுற்றி கூடி விடுவார்கள். அவர்களின் மொழிக்கு ஏற்ப உரையாடுவார்.

ஆதிவாசி குடும்பங்கள் அவருக்குப் பிடித்தமான பப்பாளிப்பழம் உள்ளிட்ட பொருட்களை கொடுக்க போட்டியிட்டார்கள். சப்பாத்தியுடன் உண்ண நல்ல காரமான காந்தாரி மிளகு கொண்டுவந்து கொடுப்பார்கள்.

அவரது நல்ல உள்ளத்தை அருகிலிருந்து அனுபவித்தறிந்த அற்புதமான நாட்கள் அவை. புராவர்த்தத்தின் படப்பிடிப்பை அதிகாலையில் ஆரம்பிப்போம். பெரும்பாலும் அவர் தான் என்னை தூக்கத்திலிருந்து எழுப்புவார். ஒருநாள் நான் சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன் என்றாலும், அன்றைய தினம் படப்பிடிப்பு இல்லையெனக் கூறினேன். அதன் காரணம் என்னவென்று ஊகித்தறிந்தவர், படப்பிடிப்பு தொடர எவ்வளவு பணம் தேவை என்று விசாரித்தார். அவரிடம் பணமில்லை என்ற போதும், தனது மேலாளர் மூலமாக தேவையான பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்து உதவினார். வேறு யாருக்கும் இவ்விஷயம் தெரியாது என்பதோடு, ஒரு நடிகனிடம் எதிர்பார்க்க இயலாத செயலும் ஆகும்.

 

Leave A Reply