\

 

 

 

 

 

 

 

 

 

 

கோவை,
ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்து பண்பாட்டு உரிமையில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்கிற உரிமை முழக்கத்தோடு கோவையில் வியாழனன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அணி திரண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் இயற்கையை வழிபட்டு உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடாக இருந்து வருகிறது. இதனையொட்டி தென்மாவட்டங்களில் ஏறு தழுவுதல் போட்டி வெகு விமர்சையாய் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்தோடு பங்கேற்பர். இந்நிலையில் பீட்டா என்கிற விலங்கு நல அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டிகள் நடைபெறவில்லை.

மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு இவ்விசயத்தில் எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து தமிழர்களின் உரிமைகள் மீது பாஜக கைவைத்தது. பின்னர் உள்நோக்கத்தோடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பொங்கல் திருநாளை விடுமுறையை பொதுப்பட்டியலில் இருந்து விருப்பபட்டியலுக்கு மாற்றியது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து ஆங்கங்கே கண்டன இயக்கங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை அவிநாசி சாலையில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு திரண்டனர். இதனைத்தொடர்ந்து கொடிசியா மைதானம்வரை ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டவை தடை செய், பண்பாட்டு உரிமைகள் மீது கைவைக்காதே உள்ளிட்ட முழக்கங்களோடு  ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிதான் என்றாலும், தமிழர் பண்பாட்டுக்கு எதிரான மத்திய அரசின் நிலைபாட்டை கண்டித்து ஜல்லிக்கட்டே நடைபெறாத மாவட்டமாக உள்ள கோவையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply