புதுதில்லி, ஜன. 12 –

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் விழாவுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறி விட்டது.

இவ்வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால், இடைக்காலத் தீர்ப்பு வழங்குவதற்கும் சாத்தியமில்லை என்று நீதிபதிகள் கைவிரித்துள்ளனர்.

இதன்மூலம் இந்தாண்டும் பொங்கல் விழாவையொட்டி, ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், அதை எதிர்த்து, விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அறிவிக்கைக்கு, இடைக்கால தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, மத்திய அரசின் அறிவிக்கை செல்லுமா? என்பது குறித்து கடந்த ஓராண்டாக விசாரணை நடத்தி வந்தது.

கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, கடைசியாக இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு அமைப்புக்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தடை விதிக்கப்பட்டதற்கு முன்னர் இருந்த சூழல்களும், காரணங்களும் தற்போதும் நிலவுவதால், ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கக் கூடாது என்று விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இவ்வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழனன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொங்கல் விழா வருவதால், உடனடியாக ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், “பொங்கல் விழாவிற்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லை; ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு தீர்ப்பு தயாராக இருந்தாலும் வரும் சனிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்க சாதியமில்லை” என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.

இடைக்காலத் தீர்ப்பாவது வழங்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

 ஜல்லிக்கட்டு எட்டு ஆண்டுகளாக  தொடரும் சிக்கல்

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டு கலாச்சாரத் தொன்மை வாய்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு, கடந்த 2008-ஆண்டு முதல் சிக்கல் எழுந்தது. அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் இரண்டு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தடையை விலக்கியது.
ஆனால், 1960-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தை மீறுவதாக, ஜல்லிக்கட்டு உள்ளது என்று கூறி, விலங்குகள் நலவாரியமான பீட்டா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டின் அடிப்படையில் முதலில் தடை விதித்தாலும், பின்னர் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இடையே, 2009-ல் தமிழக அரசானது ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தை இயற்றி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கியது. உச்சநீதிமன்றம் விதித்த 77 நிபந்தனைகளையும் பின்பற்றுவதாக அறிவித்தது. இதனடிப்படையில் 2013 வரை ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது.

ஆனால், ஜல்லிக்கட்டின் போது காளைகள் வதைபடுவது தொடருவதாகவும், 2014-ல் மட்டும் 3 காளைகள் இறந்திருப்பதாகவும் கூறி, ‘பீட்டா’ மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் அமர்வு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முழுமையாக தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதனால், 2015-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது.
ஜல்லிக்கட்டுக்கு என்று மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இனி மீண்டும் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழகத்தில் எழுந்தன. போராட்டங்களும் வெடித்தன.
இந்நிலையில், மத்திய பாஜக அரசு, சட்டம் கொண்டுவருவதற்குப் பதிலாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்குவதாக, கடந்த 2016 ஜனவரி 8-ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

“கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றை காட்சிப் பொருளாகவோ அல்லது அவற்றுக்கு பயிற்சி அளித்து வித்தை காட்டவோ பயன்படுத்தக்கூடாது; இருப்பினும், சமுதாய வழக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும், மகாராஷ்டிரம், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கும் காளைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப் படுகிறது” என்று அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருப்பதாக இந்திய விலங்குகள் நலவாரியமான

‘பீட்டா’ எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை எதிர்த்து, ‘பீட்டா’ உள்ளிட்ட 4 அமைப்புக்கள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை, கடந்த 2016-ஆம் ஆண்டு, ஜனவரி 12-ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி. ரமணா ஆகியோர் அடங்கி அமர்வு, ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இடைக்காலத் தடையை எதிர்த்து, ஜல்லிக்கட்டு அமைப்புக்களும், தடையை மறுசீராய்வு செய்யக்கோரி தமிழக அரசும் அடுத்தடுத்த நாட்களில், மனுக்களைத் தாக்கல் செய்த நிலையில், அம்மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டாக இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply