தரங்கம்பாடி, ஜன.12 –
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கல்லூரியில் பயிலும் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி வியாழனன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் ஆனந்தபாபு, முகேஷ்கண்ணா, கபிலன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பொறையார் த.பே.மாலு கல்லூரியில் வகுப்புக்களைப் புறக்கணித்து 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கடையூரில் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த ரேக்லா ரேஸ் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஐயப்பபன் தலைமை வகித்தார் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply