தோழர்களே! நமது செம்படைவீரர்கள், நமது சிவப்புக் கப்பல் படை வீரர்கள், நமது சிவப்பு விமானப்படை வீரர்கள் மற்றும் நமது சோவியத் சோசலிசக் குடியரசு ஒன்றியத்தின் நமது ஆற்றல்மிக்க படைத்துறை வீரர்கள், ஆயுதமேந்திய தொழிலாளர்களுக்கு நமது கட்சியின் மத்தியக் குழுவின் வாழத்துக்களைத்தெரிவிக்க என்னை அனுமதியுங்கள்.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பேரரசின் கீழ் இந்த உலகத்தின் முதல் செம்படையை உருவாக்கியதிலும், அது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்க மாபெரும் போர்களில் போராடியதிலும் நமது கட்சி பெருமிதம் கொள்கிறது.
நமது நாட்டின் பாட்டாளிவர்க்கம் மற்றும் விவசாயத்துறையினரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராக, தீவிரமான போராட்டங்களின் கடுமையான பாதையில் பயணம்செய்து, மகத்தான ஆற்றல்வாய்ந்த புரட்சிகரசக்தியாகவும், பாட்டாளி வர்க்க எதிரிகளுக்கு பேரச்சமூட்டுவதாகவும், ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட அனைவரது மகிழ்ச்சிக்குரியதாகவுமான வடிவத்தில் கௌரவம்மிக்க வெற்றிபெற்றுள்ளதில் நமது கட்சி பெருமிதம் கொள்கிறது.
நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நுகத்தடிகளிலிருந்து பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளை விடுதலை செய்யும் நீண்டபாதையில் பயணம்செய்து, இறுதியாக அதன் வெற்றியை செம்படையின் பத்தாம் ஆண்டு நிறைவில் கொண்டாடுவதில் கட்சி பெருமிதம் கொள்கிறது.
தோழர்களே, வலிமை எங்கேயிருந்து வருகிறது? நமது செம்படையின் வலிமைக்கான ஆதாரங்கள் என்ன?
இந்த உலகில் எப்போதும் இருந்துவந்த மற்ற எல்லாப் படைகளிலிருந்தும் நமது செம்படையை முற்றிலும் வேறுபடுத்திக்காட்டும் சிறப்பு அம்சங்கள் என்ன?
நமது செம்படையை முற்றிலும் வேறுபடுத்திக்காட்டும் முதலாவது சிறப்பு அம்சம், இந்தப்படைதான் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் விடுதலை செய்தது. இதுதான் அக்டோபர் புரட்சியின் படை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் படை.
முதலாளித்துவத்தின் ராணுவப் படைகள்
முதலாளித்துவத்தின்கீழ் எப்போதும் இருந்துவந்த எல்லா இராணு வப்படைகளும், அவற்றின் எல்லா உறுப்புக்களின்கூறுகளும் எவ்வாறு அமைந்திருந்தாலும், அது ஒருபொருட்டல்ல: அவை முதலாளித்துவத்தின் அதிகாரத்தை நீட்டிப்பதற்கான இராணுவப்படைகளே. அவை முதலாளித்துவ ஆட்சியின் இராணுவப்படைகளாகவே இருந்தன. இராணுவப்படை, அரசியல்ரீதியாக, நடுநிலையானது என்று எல்லா நாடுகளின் முதலாளிகளும் கூறும்போது, அவர்கள் பொய் கூறுகிறார்கள். அது உண்மை அல்ல. முதலாளித்துவ நாடுகளின் எல்லா இராணுவப் படைகளும் அரசியல் உரிமை இழந்தவைகளே. அவை அரசியல் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டதே இல்லை. இதுதான் உண்மை. ஆனால், எந்தவொரு அர்த்தமும் இல்லாமல் அது நடுநிலையானது என்று வர்ணிக்கப்படுகிறது. அதற்குமாறாக, எல்லா முதலாளித்துவ நாடுகளிலும், எப்போதும், எங்கெங்கும் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான அரசியல் போராட்டங்களில் அந்த இராணுவப் படைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நாடுகளில் உள்ள இராணுவங்கள் தொழிலாளர்களை அடக்குகின்றன என்பதும், அவர்களது எஜமானர்களுக்கு முட்டுக்கொடுப்பவைகளாக சேவகம் செய்கின்றன என்பதும் உண்மை அல்லவா?
பாட்டாளி வர்க்கத்தின் இராணுவப் படை
இந்த இராணுவங்களுக்கு முற்றிலும் மாறாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அதிகாரத்தைப் பரப்புவதற்கான ஒருகருவியாக, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைப் பரவலாக்கும் ஒருகருவியாக, நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ வாதிகளின் நுகத்தடியிலிருந்து தொழிலாளர்களையும், விவசாயிகளையும் விடுதலை செய்யும் ஒரு கருவியாக நமது செம்படை விளங்குகிறது என்ற உண்மையில் இது மாறுபட்டு விளங்குகிறது.
நமது இராணுவம் உழைக்கும் மக்களை விடுதலை செய்யும் ஒரு இராணுவமாகும்.
இந்த உண்மையை நீங்கள் பரிசீலித்தீர்களா, தோழர்களே? பழைய நாட்களில் மக்கள் இராணுவத்தைக்கண்டு அஞ்சினார்கள், இப்போதும் முதலாளித்துவநாடுகளில் அஞ்சுவதுபோல.
இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையே ஒரு தடுப்பு இருந்தது, ஒருவரை மற்றவரிடமிருந்து பிரிப்பதுபோல.
அது, இப்போது நம்மிடம் எவ்வாறு உள்ளது?
நம்மிடம் அதற்கு முற்றிலும் மாறாக, இராணுவமும் மக்களும் ஒன்றுபட்ட ஒருமுழுமையாக, ஒரே குடும்பமாக அமைந்திருக்கிறார்கள். இந்த உலகின் எந்தவொரு பகுதியிலும் உருவாக்கப்பட்ட அமைப்புமற்றும் இராணுவத்தின்மீது, மக்கள் கொண்டுள்ள இத்தகைய ஒரு அன்பான மனப்பான்மையையும், இனிய தன்மையையும், நமது நாட்டைத்தவிர வேறு எங்கும் காணமுடியாது. நமது நாட்டில் இராணுவம் நேசிக்கப்படுகிறது.
ஏன்?
ஏனென்றால், இந்த உலக வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்கள் இராணுவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அது, தங்கள் எஜமானர்களுக்கு அல்ல; முன்னாள் அடிமைகளுக்கு, இப்போது விடுதலைபெற்றுள்ள தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் சேவை புரிகிறது.
அங்குதான் நமது செம்படையின் வலிமைக்கான ஆதாரத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். மேலும், தங்கள் இராணுவத்தின்மீது மக்கள் கொண்டுள்ள அன்பின் பொருள் என்ன? இத்தகைய ஒரு இராணுவம் உறுதியான அரவணைப்பைப் பெறும் என்பதும், மக்களின் அரவணைப்பைபெற்ற இந்த இராணுவம் எவராலும் வெல்லப்பட முடியாதது என்பதும்தான் இதன்பொருள்.
உறுதியான அரவணைப்பு இல்லாத ஒரு இராணுவம் என்பது என்ன?ஒன்றுமேயில்லை. உழைக்கும் மக்களின் உறுதியான அரவணைப்பையும், ஆதரவையும் பெற்றிராத மிகப்பெரிய இராணுவங்கள்கூட, மிகவும் நன்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இராணுவங்கள்கூட தூள்தூளாக ஆக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ள ஒரே இராணுவம் நமது இராணுவம் தான். அதில்தான் அதன் வலிமை உள்ளது. அங்குதான் அதன் பேராற்றல் உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அதுதான் நமது செம்படையை, உலகின் மற்ற எல்லா இராணுவங்களிலிருந்தும் எப்போதும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
தொழிலாளர்களோடும், விவசாயிகளோடும் கொண்டுள்ள நெருக்கமும், சகோதர உணர்வும் என்ற நமது செம்படையின் சிறப்பியல்பு என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும்: நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்சியின் விருப்பமும், கடமையும் ஆகும்.
செம்படையின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கௌரவிக்க மாஸ்கோ சோவிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிளீனத்தில் ஆற்றிய உரையின் அம்சங்கள்:
பிராவ்தா எண்:50
தமிழில்: செ. நடேசன்
பிப்ரவரி 28, 1928.

 

Leave A Reply