அக்டோபர் 15, 2013 அன்று சிபிஐ, சுரங்கம், ஜவுளி, சிமெண்ட், வேதிப்பொருட்கள் உற்பத்தியில் ஜாம்பாவானான ஆதித்ய பிர்லா கம்பெனி அலுவலகங்களில் ரெய்டு நடத்தி பல ஆவணங்களையும், 25 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றியது. அந்த ஆவணங்களில் ஒன்று 49 பக்க நோட்டுப்புத்தகம். ஜூலை 2010க்கும் மார்ச் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் கம்பெனி பல அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்த விவரங்கள் கையால் எழுதப்பட்டிருந்தன. அதே நேரத்தில் கைப்பற்றப்பட்ட தனித்தாள்களிலும் பணப் பரிவர்த்தனை விவரங்கள் கையால் எழுதப்பட்டிருந்தன.
சிபிஐ மேலும் இந்த விவரங்கள் குறித்து விசாரணை செய்யாமல், வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துவிட்டது. வருமான வரித்துறை விசாரணையின் போது, பிர்லா நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் பிரிவின் துணை மேலாளர் ஆனந்த் குமார் சாக்சேனா அந்த நோட்டுப் புத்தகத்தில் இருப்பது தன் கையெழுத்துதானென்றும், நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் சுபேந்து அமிதாப்பின் அறிவுரையின்படியே தாம் செயல்படுவதாகவும் கூறியுள்ளார். கைப்பற்றப்பட்ட 25 கோடி கணக்கில் காட்டப்படாத தன் சொந்தப் பணம் அமிதாப் கூறியிருக்கிறார். அவருடைய சொந்தப் பணம் என்பதை வருமான வரித்துறை நம்பவில்லை. ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் 13 திட்டங்களுக்கு அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் (காங்கிரஸ் ஆட்சியில்) அனுமதி வழங்கியதற்காக 7.5 கோடி வழங்கப்பட்டதாகவோ அல்லது வழங்க நினைத்ததாகவோ ஆவணங்களிலிருந்து தெரியவருவதாக
காமன் காஸ் (Common Cause) என்கிற தன்னார்வ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் சுபேந்து அமிதாப் என்பவரின் அறிவுரையின் படியே அமைச்சர்களுக்கும், வருவாய்த் துறைப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக சாக்ஸேனா கூறியிருக்கிறார்.
அமிதாப்பின் மடிக்கணிணியில் இருந்த ஒரு விவரம்தான் இன்னும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. நவம்பர் 16, 2012 தேதியிடப்பட்ட ஈமெயிலில் “குஜராத் சி எம் – 25 கோடி (12 முடிந்தது – மீதி” என்கிற மறைமுகக் குறிப்புதான் அது. வருமான வரித்துறை அமிதாப்பிடம் இதுகுறித்து கேட்ட போது, அவர் “இவையைல்லாம் தனிப்பட்ட குறிப்புகள். குறுஞ்செய்தியாகவோ அல்லது ஈமெயிலாகவோ அனுப்புவதற்காக எழுதப்பட்டவை அல்ல. இதில் முதல் குறிப்பு என்னுடைய தனிப்பட்ட உபயோககத்திற்கு மட்டுமானது – காஸ்டிக் சோடா தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் குஜராத் ஆல்கலை கெமிக்கல்ஸ் என்கிற நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி பற்றியது,” என்று சொல்லியிருக்கிறார். அதாவது குஜாராத் சி எம் என்பது குஜராத் கெமிக்கல்ஸ்தான் என்கிறார். அமிதாப்பின் இந்த வாதம் குஜராத் ஆல்கலை கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் புத்தகத்தைப் பரிசோதித்தாலே போதும் என்று காமன் காஸ் வாதிட்டது. அப்போது குஜராத் சிஎம் நரேந்திர மோடி என்பதுதான் இப்போது நடக்கும் களேபரத்திற்குக் காரணம்.

இனி சஹாரா நிறுவனத்தின் கதை.
அங்கு வருமான வரித்துறை நவம்பர் 22, 2014 அன்று நடத்திய ரெய்டில் பிரச்சினைக்குரிய ஆவணங்களும் 137 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. காமன் காஸ் அமைப்பின் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கையில் இந்த ஆவணங்கள் சிக்கின. மே 2013 முதல் மார்ச் 2014 வரையுள்ள 10 மாதங்களில் (சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய 10 மாதங்கள்)
113 கோடி பணம் பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்டதாக பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த ஆவணங்களில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு இரண்டு முறைகளும், சத்தீஸ்கார் முதல்வர் ராமன் சிங்கிற்கு ஒரு முறையும், குஜராத் முதல்வருக்கு (மோடிஜி என்று குறிப்பிட்டு) 9 முறையும் பணம் கொடுக்கப்பட்ட விவரங்கள் இருப்பதாக காமன் காஸ் கூறுகிறது. இதில் அன்றை டெல்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித்தின் பெயரும் இருக்கிறது. அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் காமன் காஸ் தொடுத்த வழக்கை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்கு முக்கியக் காரணமாக நீதி மன்றம் குறிப்பிட்ட காரணம்தான் அதிர்ச்சி தருவது: இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வேண்டுமெனில் அரசியல்சட்டப்படியான பதவியிலிருப்பவர்களுக்கு இத்தகைய விசாரணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதத்தை பேச்சுக்கு ஒப்புக்கொண்டாலும், அரசியல்சட்டம் ஏற்படுத்திய பொறுப்பிலிருப்பவர்கள் குறித்தான குற்றச்சாட்டுகளை புலனாய்வு அமைப்புகள் முழுமையாக உறுதிப்படுத்தி மேலும் விசாரணை செய்யாமலே இத்தகைய விலக்கை வழங்க முடியுமா என்பதுதான் சட்ட வல்லுனர்களின் கேள்வி. சஹாரா-பிர்லா ஆவணங்களிலிருக்கும் விவரங்களை வருமானவரித்துறை உறுதி செய்துள்ளதாகவும், இந்த வழக்கை இந்த நிலையில் தள்ளுபடி செய்வது எப்படி சரியாகும் என்றும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.

-Vijayasankar Ramachandran

Leave A Reply