“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏறுதழுவுதல் என்றழைக்கப்பட்ட விளையாட்டுதான் இன்று ஜல்லிக்கட்டு எனப்படுகிறது. அதாவது, அணைத்துப் பிடித்தல் என்ற இந்தப் போட்டியின் நேரடிப் பொருளை காயப்படுத்துதல் என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது” – என்று மிகச்சரியாகக் கூறியுள்ளார் தனது விருமாண்டி படித்தில் ஜல்லிக்கட்டை இடம்பெறச்செய்த கமல்ஹாசன். பிரபல ஆங்கில இந்தியா டுடே இதழின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் கருத்தரங்கில் பங்கேற்றபின் அதன் தலைமைச் செய்தியாளரின் கேள்விக்குத்தான் கமல் இவ்வாறு பதிலளித்துள்ளார். அப்படியெனில்

ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, நிச்சயமாக, அது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று கூறினார்.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு, அவை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமாக உறவாடுகின்றன. அவற்றுக்கும் வலியை அறியும் உணர்வுள்ளது என்று தாவரவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்திருந்தார் என்பதற்காக நாம் எலுமிச்சம்பழத்தை வெட்டாமல் இருந்துவிட்டோமா என்றும் கோள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், ஜல்லிக்கட்டின்போது காளைகள் காயப்படுவதை நாம் பார்க்கிறோமே என்று கேட்ட நிருபரை இடைமறித்த கமல், நான் ஜல்லிக்கட்டில் விளையாடியிருக்கிறேன். காளையைத் தழுவிய ஒரு சில நடிகர்களில் நானும் ஒருவன் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஜல்லிக்கட்டில் காளை வெற்றிபெற்றதா அல்லது அதனுடன் விளையாடிய வீரர் வெற்றிபெற்றாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. காளையைத் தழுவியபடி ஒரு வீரர் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறார் என்பதுதான் விளையாட்டின் முக்கிய அம்சம்.

தமிழர்களின் பாரம்பரியப் பண்பாடு தொடர்பான நிறைய விஷயங்களை நினைவுபடுத்தும் இந்த விளையாட்டை ஒரு தமிழன் என்ற முறையில் நான் நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன்.
இந்த விளையாட்டில் காளைகள் காயப்படுத்தப்படுவதோ, வெட்டப்படுவதோ, கொல்லப்படுவதோ இல்லை. ஆனால், இன்று காளைகள் மோதியதால் நேரும் விபத்துக்களைவிட பலமடங்கு இருசக்கர வாகன விபத்துக்களால் பெருகிவரும் மரணங்களைப் பற்றித்தான் நாம் எண்ணிக் கவலைப்படவேண்டும் என்றார் கமல்ஹாசன்.
இயக்குநர் பாரதிராஜா அறிக்கை:

இதனிடையே இன்று இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்: “இது மிருக வதையல்ல, மனித வதையென்று மாற்றிச் சொல்லுங்கள். ஜல்லிக்கட்டில் மாடுகள் இறந்ததாக சாட்சிகள் இல்லை. மாறாக மனிதனுக்கு விபத்துக்கள் நடந்துள்ளன. நிலைமை இப்படியிருக்க இதனை மிருக வதை என்று சொல்லித் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? ஆயிரக்கணக்கில் அடிமாடுகள் போகும் அவலத்தை உங்களால் தடுக்க முடியுமா? கோயில்களில் காட்சிப் பொருட்களாக கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானைகளை உங்களால் அவிழ்த்துவிட முடியுமா?

பறவைகளையும், விலங்குகளையும் சிறைப் பிடித்து ரசிக்கும் மிருகக் காட்சி சாலைகளின் கதவை மூடுங்கள். அவற்றைச் சுதந்திரமாக வெளியே விட முடியுமா உங்களால்? குதிரைப் படை, யானைப் படை என்று மத்திய, மாநில அரசு விழாக்களில் அணிவகுத்து நிற்கும் விலங்குகளுக்கு விடுதலை கிடைக்குமா? தேர்தல் நேரங்களில் கழுதைகளும், ஒட்டகங்களும் மலைக் கிராமங்களுக்கு ஓட்டுப் பெட்டிகளைச் சுமக்கின்றனவே. அவற்றிற்கு உங்கள் கருணை கிடைக்குமா? காவல்துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களை விடுவிக்க முடியுமா? அவ்வளவு ஏன்… அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விலங்குகளுக்கு மாற்று உணவாக சைவ உணவை ஏற்பாடு செய்து அவற்றை அவை சாப்பிடும்படி செய்ய முடியுமா உங்களால்? இதையெல்லாம் உங்களால் செய்ய முடியும் என்றால் ஜல்லிக்கட்டுக்கும் தடை விதியுங்கள்.

ஜல்லிக்கட்டு என்பது திமிலா – தோளா எனும் போட்டியே அன்றி மிருக வதைக்கு இதில் இடமே இல்லை. இந்தத் தடையினால் நம் நாட்டு மாடுகள் அழிக்கப் படுகின்றன. இதில் அந்நிய முதலீடும் தலைகாட்டுகிறது. நம் கண்முன்னே பண்பாட்டுப் பாரம்பரியம் பலியாக வேண்டுமா? தமிழர்களின் தொன்மைப் பாரம்பரியம் அழிய வேண்டுமா? ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு கடைசியில் மனிதனையே கடிக்க வருமாம் ஒன்று. அதுபோல இருக்கிறது இது. எங்கள் வாடிவாசல்களில் காளைகளின் குளம்புக் கோலங்கள் பதியட்டும்” – என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply