சென்னை, ஜன. 12 –

ஆட்டோ ஒட்டுநர்களின் வருமானத்தை அடியோடு பறிக்கு வகையில் மத்திய அரசு கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இதனை எதிர்த்து ஆட்டோ ஓட்டுநர்கள் வியாழனன்று (ஜன.12) சென்னையில் ஆவேச போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:

மத்தியஅரசு 2014ம் ஆண்டு சாலை பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர முயற்சித்தது. இதற்கான மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்களை எதிர்த்து நாடு முழுவதும் இத்துறையில் உள்ள தொழிலாளர்கள் போராடினர். எனவே, அந்த சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டது. இருப்பினும், அச்சட்ட மசோதாவில் இருந்த அம்சங்களை, அரசாணைகள் மூலம் மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக கடந்த டிசம்பர் மாதம் 29ந் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆர்டிஓ அலுவலக பதிவு கட்டணங்கள் 30 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க 300 ரூபாயாக இருந்த கட்டணம் 640 ரூபாயாகவும், இதற்கான காலதாமத கட்டணம் 50லிருந்து 1000 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு தகுதிச்சான்று (எப்சி) பெறுவதற்கான கட்டணம் 225லிருந்து 625 ரூபாயாகவும், 60 நாள் காலதாமதாக தகுதிச் சான்று பெற 100 ரூபாயாக இருந்த அபராதம் 3000 ரூபாயாகவும், 90 நாள் காலதாமதமாக தகுதிச்சான்று பெற 150 ரூபாயாக இருந்த அபராதம் 4500 ரூபாயாகவும், ஆட்டோ பெயர் மாற்ற 625 ரூபாயாக இருந்த கட்டணம் 1025 ரூபாயாகவும், தவணை கொள்முதல் பதிவு, நீக்க கட்டணம் (ஹையர் பர்ச்சேஸ் ஒப்பந்தம்-எச்பி)  தலா 125 ரூபாயிலிருந்து 1525 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடும், ஆட்டோ தொழிலும் கடும் நெருக்கடியில் உள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. இவற்றோடு இத்தகைய கட்டண உயர்வுகளால் ஆட்டோ தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கையை சூறையாடும் இந்த கட்டண உயர்வையும், வான இன்சூரன்ஸ் கட்டஉண உயர்வையும் திரும்ப பெற வேண்டும், ஓலா, யூபர் போன்ற அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை உயர்வை குறைக்க வேண்டும், சென்னை விமான நிலையத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம் (தென்சென்னை), ஆட்டோ தொழிலாளர் சங்கம் (வடசென்னை) இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. வடசென்னை மாவட்டத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் வி.குமார், அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளன மாநிலத் தலைவர் ஏ.பி.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயல் தலைவர் ஏ.எல்.மனோகரன், பொதுச் செயலாளர் வி.ஜெயகோபால், தென்சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், ஆயிரம்விளக்கு பகுதிச் செயலாளர் கே.பச்சையப்பன் உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply