தமிழ்த் திரைப்பட வரலாற்றில் வெகுமக்களின் நாயகனாக, எளிய மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர் எம்ஜிஆர். அவரோடு முரண்பட்டோரும் மறுக்க இயலாத உண்மை இது. அவரின் பிறந்த நூற்றாண்டு கடந்த 2016 ஜனவரி 17 ல் தொடங்கி இந்த ஜனவரியுடன் நிறைவடையும் நிலையில் இந்த ஆண்டையே அவரின் நூற்றாண்டாகக் கருதி களமிறங்கியுள்ளனர். தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டை அரசுடன் இணைந்து கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். அதன் துவக்க நிகழ்வாக அவரின் பிறந்த நாளான ஜனவரி 17 அன்று சென்னை அபிராமி திரையரங்கில் துவக்கவிழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் திரையிடப்படுகிறது. சென்னையின் அனைத்துத் திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு விழா நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். எம்ஜிஆர் நடித்த 136 திரைப்படங்கள் இந்த ஆண்டு முழுதும் திரையிடப்படுகின்றன. நடிகர் சங்கம், ஃபெப்சி போன்ற அமைப்புகள் இணைந்தே இந்த விழாவுக்குத் திட்டமிட இருக்கின்றன. இயக்குநர் பாரதிராஜா திரைத்துறை சார்பில் இதற்குத் தலைமை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply