சென்னை, ஜன.11-
தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்துப் போனதால் வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும் வறட்சி நிவாரணம், வேலை மற்றும் கூலி வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வத்தை புதனன்று மாலை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநில பொறுப்புச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.சீனிவாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் ஆகியோர் நேரில் சந்தித்து, தமிழக விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து கோரிக்கை மனு அளித்து பேசினர்.அந்த மனுவில் கூறியிருக்கும் அம்சங்கள் வருமாறு:தமிழ்நாட்டை தமிழக அரசு வறட்சி பாதித்த மாநிலமாக அறி
வித்துள்ளதை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வரவேற்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள 90 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் கடந்த 3 மாத காலமாக வேலையே இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பில் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஏற்கெனவே தமிழக அரசுக்கு நாங்கள் வைத்த கோரிக்கையில் குடும்பத்திற்கு தலா ரூ. 10,000/- நிவாரணம் கோரியிருந்தோம். 100 நாள் வேலைத் திட்டத் தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை நாட்களை இரட்டிப்பாக்க கோரியிருந்தோம். கடந்த 5 மாதங்களாக 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட வேலையும் சிறிதளவே. அதற்கான கூலியை மத்திய அரசுவழங்காததால் விவசாயத் தொழிலாளர்களுக்கு அதுவும் கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது.

இச்சூழலில் இவை அனைத்தையும் தமிழக அரசு வறட்சி அறிவிப்புகளையொட்டி கவனத்தில் எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தமிழக முதல்வர் அறிவிப்பில் இவை இல்லாதது குறித்து மிக அதிர்ச்சியடைந்தோம்.ஆகவே,தமிழக அரசு 90 லட்சம் விவசாயத் தொழிலாளர்களை பாதுகாத்திடும் விதத்தில் கீழ்க்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றிட – அறிவிப்பாக வெளியிட வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.கோரிக்கைகள்

1. வறட்சி கால பாதிப்பிற்குள்ளான விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10,000 நிவாரணம் வழங்கிட வேண்டும்.
2. தமிழகத்தில் வாழும் 90 லட் சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக விவசாயத்தின் மூலம்தொடர்ச்சி 3ம் பக்கம்வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக கிடைக்கின்ற வேலைகளை 100 நாள் என்பதனை, 200 நாட்களாக உயர்த்தி, சட்டக்கூலியாக ரூ. 400/- உயர்த்தி வழங்கிட வேண்டும்.
3. ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், ஒப்பந்ததாரர்கள் மூலமாக எந்திரங்களைக் கொண்டு தூர்வாரப்படுவதை கைவிட்டு, விவசாயத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கும் வகையில் – அவர்களைக் கொண்டே அந்த பணியை செய்திட கோருகிறோம்.
4. கடந்த மூன்று மாத காலமாக பெரும்பகுதியான விவசாயத் தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்; இந்த காலத்தில் நடந்துள்ள சிறிதளவான வேலைக்கான தற்போதைய சட்டக் கூலி ரூ. 203/- அமல்படுத்தப்படாமல் உள்ளது. அதுவும் முழுமையாக வழங்கிட வேண்டும். வங்கிகளில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கு தனியான கவுண்டர் திறந்து வழங்கிட வேண்டும்.
5. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிப் பகுதிகளிலும் அமல்படுத்திட வேண்டுமென்றும், (ஏற்கனவே தமிழக அரசு 2003ல் பேரூராட்சிப் பகுதியை சிறப்பு ஊராட்சியாக மாற்றி அங்கும் கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை வழங்கிட வேண்டுமெனவும் கடிதம் எண்: 6242, நாள்: 17.12.2003 – நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, அரசு செயலாளர் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.) அதை மாநிலம் முழுவதும் அமல்படுத்திட வேண்டும்.
6. பொது விநியோகத் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு 30 கிலோ அரிசியாக உயர்த்தி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply