திருப்பூர், ஜன. 11 –

திருப்பூரில் கடன் பாக்கி தராத தொழிலாளியின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவரை காவலர்கள் கைது செய்தனர்.

திருப்பூர் ஆத்துப்பாளையம் காயத்ரி நகரை சேர்ந்தவர் பிரதீப் (32). இவர் அப்பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இதே பகுதியில் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (54) என்பவர் பாத்திர பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் பிரதீப்பின் கடைக்கு அடிக்கடி சென்று டீ குடிப்பது வழக்கம். இந்தநிலையில் கடைக்கு டீ குடிக்க வந்த சண்முகசுந்தரத்திடம் கடன் பாக்கி பணத்தை பிரதீப் கேட்டார். இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரதீப் கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து சண்முகசுந்தரத்தின் முகத்தில் ஊற்றினார்.

இதில் சண்முகசுந்தரத்தின் முகம், கை, கால்கள் வெந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து , அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் சண்முகசுந்தரம் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேலம்பாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர்

Leave A Reply