காதல் மனித குலம் தழைக்கவும் மகிழ்ச்சியில் திளைக்கவும் கிடைத்திருக்கும் பெற்றதற்கரிய வாய்ப்பு. ஆனால் காதலிப்பதை பெரும்குற்றமாய்க் கருதுகிறது சாதிவெறி பிடித்த வர்ணாசிரம இந்திய சமூகம். சாதியப் பெருமையும் கர்வமும் ஆணவமும் கொண்டு வெறிபிடித்து அலையும் சாதிய வெறியர்களால் இளம் தளிர்கள்சாகடிக்கப்படுவது கொடுமையும் கொடூரமும் கொண்டதாகும். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் அத்தகைய கொடூரங்களுக்கு தருமபுரி இளவரசன் முதல் உடுமலை சங்கர் எனநூற்றுக்கும் மேற்பட்டோர் இரையாகியுள்ளனர்.

இத்தகைய கொலைவெறிச் செயல்கள், சாதி ஆணவக் கொலைகள் அதிகரிப்பதற்கு வெறி கொண்ட உற்றார் – உறவினர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருக்கும் காவல்துறையும் அலட்சியமாக இருக்கும் தமிழக அரசும் கூடத்தான் காரணம்.அச்சுறுத்தலுக்குள்ளாகும் காதலர்கள், சாதிமறுப்புத் திருமண தம்பதியர்கள் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி. மாவட்டம் தோறும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் குறுகியகால காப்பகங்கள், அச்சுறுத்துபவர்கள் மீதும் பாதுகாப்பளிக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை உள்ளிட்ட பரிந்துரைகளை 3 மாத காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.ஆனால்அந்த தீர்ப்பு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

அமல்படுத்தக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் ஜனநாயக மாதர்சங்கமும் இதர முற்போக்கு சக்திகளும்தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராகச் செயல்பட்ட அ.சவுந்தரராசன், சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். ஆனால் அதிமுக அரசோ சாதி ஆணவக்கொலைகள் ஏதும் தமிழகத்தில் நடக்கவும் இல்லை என்றே சாதித்தது.தற்போது நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாயன்று அரிதானதீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. தன் மகளை காதல் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞனின் சகோதரியை வீடு புகுந்து வெட்டிக் ்கொலை செய்த பெண்ணின் தந்தைக்கும் உடந்தையாக இருந்த தாய்க்கும் கூட்டுச் சதிக்காக ஆயுள் தண்டனையும் வன்கொடுமை சட்டப்படி 11 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும் மூவாயிரம் அபராதமும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.8.25 லட்சம் இழப்பீடும் குழந்தைக்கு 21 வயது வரை மாதம் ரூ.11,600 உதவித்தொகையும் அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சாதி ஆணவக் கொலை வழக்குகளில் இந்தத்தீர்ப்பு மிக முக்கியமானது. அதுவும் வன்கொடுமைதடுப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி மிக விரைவாக முடிவுக்கு கொண்டு வந்திருப்பதற்காக வழக்கறிஞர் டி.ராஜ பிரபாகரனின் செயல்பாடு பாராட்டுக்குரியது. இந்த தீர்ப்பின் அம்சங்களை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அத்துடன்சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரவும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை இனியாவது தாமதமின்றி நிறை வேற்றவும் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டும்.

Leave A Reply