புதுதில்லி:
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மனு அளிக்க வந்த தமிழக அதிமுக எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மறுத்துவிட்டார்.ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அதிமுக எம்.பி.க்கள் புதனன்று பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்க தில்லி சென்றிருந்தனர். முதலில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சரைச் சந்தித்த அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை கோரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் மனுவை, அவரிடம் அளித்தனர்.

பின்னர், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் பிரதமர் மோடி தமிழக எம்.பி.க்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார்.இதனால் ஏமாற்றமடைந்த தம்பிதுரை தலைமையிலான, அதிமுக எம்.பி.க்கள் என்ன செய்வது என தெரியாமல், பிரதமரின் அலுவலத்தில் மனுவை அளித்து விட்டுத் திரும்பினர்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மனு அளிக்க வந்தது குறித்து, தம்பிதுரை செய்தியாளர்களுக்கு தில்லியில் பேட்டியளித்தார். அப்போது, “ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக சசிகலா எழுதிய கடித்ததை பிரதமரிடம் கொடுக்க வந்தோம்; ஆனால், பிரதமர் மோடி கென்ய நாட்டு அதிபருடனான சந்திப்பினால் எங்களை சந்திக்கவில்லை; எனவே பிரதமரின் முதன்மை செயலாளர் மிஸ்ராவிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார். முன்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையுடன் அதிமுக எம்.பி.க்கள் சென்றபோதும், மோடி அவர்களைச் சந்திக்க மறுத்து அவமானப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply