புதுதில்லி, ஜன. 11 –
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட் டுக்கு 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. காட்சிப்படுத்தப் பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படுவதாகவும், அந்த அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அறிவிக்கைக்கு, இடைக்கால தடை விதித் தது. மேலும், கடந்த ஓராண்டாக இவ்வழக்கில் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அமர்வு முன்பு கடந்தடிசம்பர் 7-ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில், அரசு முதன்மை வழக்கறிஞர் நரசிம்மா ஆஜரானார். அவர், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண் டுமென்று கோரிக்கை விடுத்தார். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சார்பில் சுப்பிரமணியசாமியும் ஆஜராகி வாதாடினார். 11 பக்க அறிக்கை ஒன்றையும் அவர்தாக்கல் செய்தார்.ஆனால், தடை விதிக்கப் பட்டதற்கு முன்னர் இருந்த சூழல்களும், காரணங்களும் தற்போதும் நிலவுவதால், ஜல்லிக்கட்டுக்கான தடைநீக்கக் கூடாது என்று விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இவ்வழக்கில் அனைத் துத் தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தவழக்கில், வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. ஓரிரு நாட்களில் தீர்ப்பு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே-யும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், உச்சநீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை, ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டு வரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அனில் மாதவ் தவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply