பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரும்பாலான மக்களுக்கு பெரிய துன்பங்களை உருவாக்கியுள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை! மக்களிடம் அதிருப்தி உருவான பிறகு மோடி அரசாங்கம் “ரொக்கமற்ற பொருளாதாரம்” என்பதே உண்மையான நோக்கம் என திசை திருப்பியது. ஆனால் “ரொக்கமற்ற பொருளாதாரம்” என்பது எவருடைய குறிக்கோள்? அதனால் பலன் யாருக்கு? ரொக்கமற்ற பொருளாதாரம் எனும் அறிவிப்பின் பின்னால் எவரின் நலன் ஒளிந்துள்ளது? இக்கேள்விகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் பதில்களை முன்வைக்கிறார் நார்பர்ட் ஹேரிங் எனும் ஜெர்மானிய பொருளாதார அறிஞர்.

“கேட்டலிஸ்ட்” அமைப்பின் உண்மையான நோக்கம்:
அக்டோபர் மாதத்தில் “கேட்டலிஸ்ட்” (Catalyst) எனும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு அமெரிக்காவின் USAID (United States Agency for International Development) மற்றும் இந்திய நிதி அமைச்சகத்தின் கூட்டு நிறுவனமாகும். இந்த அமைப்பின் துவக்கவிழாவில் பேசிய அமெரிக்க தூதர் ஜோனாதன் அடல்டன் பின் வருமாறு கூறினார்: “தினசரி வணிகத்தை ரொக்கமற்ற நிகழ்வாக மாற்றும் சவாலை சந்திப்பதில் “கேட்டலிஸ்ட்” தனது கவனத்தை முழுமையாக செலுத்தும்.”
இந்த அமைப்பின் முதன்மை அதிகரியாக நியமிக்கப்பட்டவர் பாதல் மல்லிக் என்பவர். இவர் ஸ்னாப் டீல் (Snap Deal) எனும் இணைய வர்த்தக நிறுவனத்தின் உதவித் தலைவராக பணியாற்றியவர். இந்த அமைப்பின் திட்ட அமலாக்க இயக்குநராக நியமிக்கப்பட்டவர் அலோக் குப்தா என்பவர். இவர் அமெரிக்காவின் USAIDல் பணியாற்றிவர் என்பது மட்டுமல்ல; ஆதார் அட்டை திட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இந்த “கேட்டலிஸ்ட்” அமைப்பிற்கு நிதி உதவி செய்வது யார்? அமெரிக்காவின் USAID அமைப்புதான்! எவ்வளவு நிதி உதவி என்பது பரமரகசியம்! “கேட்டலிஸ்ட்” அமைப்பின் இலட்சியம் என்ன? பாதல் மல்லிக் சொல்கிறார்:

“(சிறு) வர்த்தகர்கள் மற்றும் குறைந்த வருவாய் உள்ள நுகர்வோர்களிடையே ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஆழமாக பரவாலாக்குவதில் உள்ள தடைகளை அகற்றுவதுதான் இதன் இலட்சியம்.” ரொக்கமற்ற பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவைத் தள்ளிவிட அமெரிக்கா, நமது நிதி அமைச்சகத்தை “மூளைச் சலவை” செய்ததும் அதற்கு நிதி அமைச்சகமும் மோடி அரசாங்கமும் தாள் பணிந்ததும் இதன் மூலம் அம்பலமாகிறது. ரொக்கமற்ற பொருளாதாரம் குறித்து பல மாதங்களாகவே அமெரிக்காவும் மோடி அரசாங்கமும் “கூட்டுக் களவாணி திட்டம்” தீட்டியுள்ளனர். 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் USAID ஒரு அறிக்கையை தயாரித்து மோடி அரசங்கத்திடம் தந்துள்ளது. இந்த அறிக்கையின் தலைப்பு “ரொக்கத்திற்கு அப்பால்” என்பதாகும்.

ரொக்கத்தின் மீது தாக்குதலுக்கு மெகா கூட்டணி:

சிறு வணிகர்களும் குறைந்த வருவாய் உள்ள மக்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வர மறுக்கின்றனர். அவர்களை “ரொக்கமற்ற” சுழற்சிக்குள் கொண்டுவர ஏதேனும் அதிரடியான நடவடிக்கை தேவை என இந்த அறிக்கை கூறுகிறது. அந்த அதிரடிதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கையா எனும் கேள்வி முன்வந்துள்ளது. இந்த அறிக்கை தனது ஆய்வின் மூலம் சில உண்மை விவரங்களை முன்வைக்கிறது:

l 97% சில்லறை வர்த்தகம் ரொக்கம் மூலமாகவே நடக்கிறது.
l 11% பேர்தான் ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்துகின்றனர்.
l 6% வணிகர்கள்தான் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்கின்றனர்.
அமெரிக்க நிறுவனத்திற்கு இந்த உண்மை விவரங்கள் கசப்பானவை! சவாலானவை! இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இந்த அறிக்கை சில ஆலோசனைகளை பட்டியலிடுகிறது:
l அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் வங்கி மூலமாகவே ஊதியத்தை அளிக்க வேண்டும்.
l அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக வங்கியில் செலுத்தப்பட வேண்டும்.
l சுயஉதவி குழுக்களின் நடவடிக்கைகளும் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாற்ற வேண்டும்.
l அடல் பென்சன் யோஜனா போன்ற திட்டங்களும் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாற்ற வேண்டும்.
l சிறிய அளவிலான ரொக்கம் பயன்படுத்தும் தேவைகளான பேருந்து போக்குவரத்துகளிலும் ரொக்கமற்ற பரிவர்த்தனை அமல்படுத்தப்பட வேண்டும். ஹாங்காங் அனுபவத்தை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
l ரொக்கமற்ற பரிவர்த்தனையை பயன்படுத்துவோருக்கு பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும்.
l ரொக்கமற்ற பரிவர்த்தனையை பயன்படுத்துவோருக்கு வரிச் சலுகை உட்பட பல சலுகைகளை அளிக்கலாம்.

இந்த ஆலோசனைகளில் பலவும் மோடி அரசாங்கம் சிரமேற்கொண்டு அமலாக்கி வருகிறது என்பது அனுபவ உண்மை. குறிப்பாக ஊதியத்தை நேரடியாக வங்கிக்கு அனுப்புவது, பரிசுத் திட்டங்கள், சலுகைகளை வங்கியில் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் மோடி அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு அமெரிக்க அமைப்பின் ஆலோசனைகள் மோடி அரசாங்கத்திற்கு ஆணைகளாக அமைகின்றன என்பது சாதாரண மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமையும். ஆனால் இதனைத் தொடர்ச்சியாக இடதுசாரிகள் கூறிவருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு அமெரிக்காவின் USAID அமைப்பு ஒரு முக்கியமான விவரத்தை வெளியிட்டது. 35 முக்கியமான அமெரிக்க, இந்திய மற்றும் சர்வதேச அமைப்புகள் USAID மற்றும் நிதி அமைச்சகத்துடன் கை கோர்த்துள்ளன என்பதுதான் அந்த விவரம். எதற்காக? ரொக்கப் பணத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்கவே இந்த “கூட்டணி” அமைக்கப்பட்டது.

எவரெல்லாம் இக்கூட்டணியின் அங்கத்தினர்கள்? 

பில்கேட்ஸ்/மிலிண்டா குழுமம்/சிட்டி குழுமம் (CITI BANK)/ கிளிண்டன் குழுமம்/ ஐரோப்பிய வங்கி/ அமெரிக்க வளர்ச்சி வங்கி/ பாகிஸ்தான் அரசாங்கம்/ ஜோர்டான் அரசாங்கம்/ மாஸ்டர் கார்ட்/விசா கார்ட் (கடன் அட்டை நிறுவனங்கள்)/ கோக்கோ கோலா/ கிராமீன் வங்கி போன்றவை இக்கூட்டணியில் இணைந்துள்ளனர்.  கிராமீன் வங்கியின் தலைவர் வங்கதேசத்தை சேர்ந்த முகம்மது யூனூஸ் சமீபத்தில் மோடியைச் சந்தித்ததும் ரொக்கமற்ற பொருளாதாரத்தை ஆதரித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது. சில வளரும் நாடுகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். எனினும் எந்த ஒரு வளர்ந்த நாடும் இதில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஷ்யா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா போன்ற பிரிக்ஸ் நாடுகளும் தென் கொரியா, மலேசியா போன்ற நாடுகளும் இதில் இணையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவுக்கு என்ன நன்மை?
இந்தியாவில் ரொக்கமற்ற பொருளாதாரம் உருவானால் கீழ்க்கண்ட மூன்று மிகப்பெரிய முக்கிய பலன்கள் அமெரிக்காவுக்கு ஏற்படும்.

1) அமெரிக்க கணினி தொழில்நுட்ப நிறுவனங்களும் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களும் மிகப்பெரிய வணிக வாய்ப்புகளை பெறுவர். உதாரணத்திற்கு விசா/மாஸ்டர் கார்ட்/சிட்டி குழுமம் போன்ற கடன் அட்டைகளை அளிக்கும் நிறுவனங்கள் லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்களை பெற வாய்ப்பு உருவாகும். ஏற்கெனவே இந்திய வங்கிகள் விசா அல்லது மாஸ்டர் கார்டுடன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
2) அமெரிக்க நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் பல்வேறு பரிவர்த்தனைகளை உளவு பார்க்க முடியும். நிதி தரவுகள் இன்று தங்கத்திற்கு இணையாக கருதப்படுகிறது. இந்த உளவு விவரங்கள் சர்வாதிகார பாதையில் செல்லும் மோடி அரசாங்கத்திற்கும் பயன்படும்.
3) அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என அமெரிக்கா உரிமை கோரும் ஆபத்து உருவாகும். இதன் மூலம் எந்த ஒரு நிதி பரிவர்த்தனையையும் ஏற்கும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் அமெரிக்காவின் கைகளில் இருக்கும்.

இதற்கு ஏற்கெனவே சில உதாரணங்கள் சமீபத்தில் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் ஒரு மிகப்பெரிய ஜெர்மானிய வங்கி அமெரிக்காவின் ஆணையின் பெயரில் பல ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் உண்டானது. சில ஜெர்மானிய நிறுவனங்கள் சட்டப்படி ஈரானுடன் வர்த்தகம் செய்த பொழுதும் அந்த நிதி பரிவர்த்தனைகளை அமெரிக்க முடக்கியது. இதனால் இந்த நிறுவனங்கள் மூடுவிழா செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று ஜெர்மனியின் டியூட்ஷே வங்கி. இந்த வங்கியின் மீது சுமார் 14 பில்லியன் டாலர்கள் (ரூ84000 கோடி) அபராதத்தை அமெரிக்கா விதித்தது. இந்த மிகப்பெரிய வங்கி, தான் தொடர்ந்து செயல்பட அபராதத்தை 7 பில்லியன் டாலர்களாக குறைக்க அமெரிக்காவிடம் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்தகைய நிதி ஆளுமையைப் பெறும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு ஏற்படும். எனவேதான் இந்தியாவின் பொருளாதாரத்தை ரொக்கமற்றதாக மாற்றிட அமெரிக்கா தொடர்ந்து மோடி அரசாங்கத்தை மூளைச் சலவை செய்து வருகிறது. இந்திய மண்ணின் தேசியம் குறித்து போலியாக கூப்பாடு போடும் மோடி அரசாங்கம் சிறிதும் வெட்கமின்றி அமெரிக்காவின் கூற்றுகளை சிரமேற்கொண்டு செயல்படுத்த திட்டமிடுகிறது.

ரொக்கமில்லா பரிவர்த்தனையைச் சாத்தியமாக்கிட 100ரூ இணைய தளம் தொடர்பு, குறைந்த விலையில் தகவல் தொடர்பு சாதனங்கள், தகவல் தொடர்பு குறித்த அறிவுசார் உணர்தல் எல்லாவற்றிற்கும் மேலாக தரவு பாதுகாப்பு இவையெல்லாம் மிகவும் அவசியம். இவை முற்றாக உத்தரவாதம் செய்யாமல் ரொக்கமில்லா பரிவர்த்தனை என்பது கானல் நீராகவே அமையும். அமெரிக்காவின் தாளத்திற்கு நடனமாடும் மோடி அரசாங்கத்தின் உண்மை முகத்தை இந்திய மக்கள் அறியும் நாள் தொலைவில் இல்லை.

(ஆதாரங்கள்: 1) News Clickல் நார்பர்ட் ஹேரிங் அவர்களின் கட்டுரை 2) Catalyst.org 3) USAID.com)

Leave A Reply

%d bloggers like this: