சிவகங்கை, ஜன. 11 –

சிவகங்கை மாவட்டத்தில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய கார்த்திகைசாமி என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் , வைரவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகைசாமி. இவர் மீது கொலை , கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் செவ்வாயன்று நள்ளிரவு , கார்த்திகைசாமி உட்பட 6 பேர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு , அங்கிருந்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து , இவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர். இன்று அதிகாலை , இந்த 6 பேரும் சிவகங்கையில் உள்ள காயங்குளம் அருகே பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்களை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். அதில் படுகாயமடைந்த காவலர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தப்பி சென்றவர்களை பிடிக்க கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை 9 மணியளவில் நைனாங்குளம் பாலம் அருகே கார்த்திகைசாமியை கண்ட காவலர்கள் அவரை என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். அவரது உடல் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் அவருடன் இருந்த 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதிகளில் கூடுதலாக காவலர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.