அகமதாபாத், ஜன. 11 –
குஜராத் உள்ளாட்சித் தேர்தலில், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத பெரும் தோல்வியை பாஜக அடைந்திருக்கிறது.அங்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் சிற்றூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 29-ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக முன்னெப்போதும் இல்லாத படுதோல்வியைச் சந்தித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, 36 மாவட்ட ஊராட்சிகளில் ஒன்றில் கூட பாஜக வெற்றிபெற முடியவில்லை.

அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. அதேபோல, 8624 ஊராட்சிகளில், வெறும் 2 ஆயிரத்து 891 இடங்களை மட்டுமே பாஜகவால் பெற முடிந்திருக்கிறது. ஊராட்சி ஒன்றியங்களிலும் இதே நிலைதான். மொத்தமுள்ள 193 ஊராட்சிகளில் 80-க்கும் குறைவான ஒன்றியங்களே பாஜகவுக்கு கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி 113 இடங் களை வென்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நகராட்சி அமைப்பு களுக்குத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, பாஜக பெரும்பாலான இடங்களைப் பெற்றிருந்தது. தற்போது ஒரே மாதத்தில் கிராமப்புறங் களில் பாஜகவுக்கு குஜராத் மக்கள் பெரும் அடியைக் கொடுத்துள்ளனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சரியாக இரண்டு மாதங்கள் கழிந்துள்ள நிலையில், பிரதமர் மோடி குறிப்பிட்டதை போன்ற எந்த வொரு நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக அனைத்து விதமான சிறு, குறுதொழில்களும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி, லட்சக்கணக்கான மக்களின் வேலைகளையும், கூலியையும் பறித்து வீதியில் தள்ளியிருக்கிறது.

ஆனால் இந்த உண்மைகளை துளி அளவும்ஏற்றுக் கொள்ளாத பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் மீண்டும் மீண்டும் வேதனையை பொறுத்து கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுரைகளை வாரி வழங்கி வழங்கி வருகின்றனர்.இந்தப் பின்னணியில், டிசம்பர் இறுதி வாரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாஜக அடைந்துள்ள இந்த படுதோல்வி, 2017-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை தேசிய ஊடகங்கள் வெளியிடவில்லை. பாஜக வெற்றி பெற்றிருந்தால், மோடியின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என அதே ஊடகங்கள் ஊதித் தள்ளியிருக்கக் கூடும். ஆனால் படுதோல்வி என்பதால் முழுமையான விபரங்களைக் கூட ஊடகங்கள் வெளியிடவில்லை. ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் கைகளில் இருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் மோடியை தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மோடி  கார்ப்பரேட்டுகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

Leave A Reply