சென்னை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் புதனன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லையில் கடந்த மே மாதம் நடந்த சாதிய ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு நெல்லை விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல் கொலையாளிகள் மிகக் கொடூரமான முறையில் கல்பனா என்ற பெண்ணை படுகொலை செய்துள்ளனர்.

இப்படுகொலையை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம், மனித உரிமை அமைப்புகள், தலித் அமைப்புகள் சார்பில் கடந்த காலத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. நீதிமன்றங்களில் பல வழக்குகள் ஆண்டு க்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலை யில், எட்டே மாதங்களில் இவ்வழக்கில் தீர்ப்பு வந்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழகத்தில் சாதிய ஆணவக் கொலைகளே நடைபெறவில்லை என்று ஆட்சியாளர்கள் ஆணித்தரமாக கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இத்தீர்ப்பு ஆட்சியாளர்களுக்கு ஒரு சம்மட்டி அடி. மேலும் இத்தகைய சாதி மறுப்பு திருமணங்களை சாதி வெறிகொண்டு எதிர்த்து,ஆணவப் படுகொலைகளை நிகழ்த்துபவர் களுக்கும் சாதிய வெறியைத் தூண்டி அரசியல் நடத்துபவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. சாதிய ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு 8 மாத காலமாகியும் தமிழக அரசு இதை கிடப்பில் போட்டிருப்பது சாதிய ஆணவக் கொலைகள் குறித்த தமிழக அரசின் அக்கரையற்ற போக்கை காட்டுகிறது.

இத்தீர்ப்பு வந்துள்ள இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக அந்த வழிகாட்டுதல்களை அமலாக்கிட வேண்டுமாய் ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம். மேலும் சாதிய ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டுமாய் வலியுறுத்துகிறோம்.

Leave A Reply