திருப்பூர்,
வறட்சியின் பிடியில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை பல்லடம் பேருந்து நிலையம் எதிரில் கொசவபாளையம் பிரிவில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும், ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள் வழியே உயர் அழுத்த மின் பாதை, எரிவாயு குழாய் பாதை அமைப்பதைக் கைவிட வேண்டும், விவசாய வேலையை இழந்திருக்கும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்  வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் உட்பட கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.ஷகிலா உள்பட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இடைக்குழுச் செயலாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். நிறைவாக உண்ணாவிரதத்தை முடித்து வைத்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் உரையாற்றினார்

Leave A Reply