மோடி அவரது முன்னோடிகளோடு ஒப்பிடுகையில், பாரதிய ஜனதா கட்சியின் மிகப் பெரிய தலைவராகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராகவும் உயர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது முழக்கமிடும் பேச்சுகளின் மீதான கவனத்தினைச் செலுத்த வேண்டியதாய் இருக்கிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோருக்குப் பிறகு, அண்மைக் காலங்களில் மோடியைப் போன்று வேறெந்தப் பிரதமரும் இத்தகைய உணர்ச்சிமிக்க, சொல்லாட்சித் திறம் வாய்ந்த
முறையில் திறமையாகத் தங்களது சொல்லாடல்களை அமைத்துக் கொண்டதில்லை. ஆனாலும் ஒரு பேச்சாளர் என்பவர் வாய்ச்சவடால் வீரராக, மக்களது உணர்ச்சிகளைக் கிளறி விடுபவராக இருக்கும் போது சிக்கல் என்பது எழுகிறது. பண்டைய கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் வாய்ச்சவடால் வீரர் என்ற வார்த்தை முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட போது, அது பொதுமக்களுக்காக போராடுகின்ற தலைவரைக் குறிப்பதாகவே இருந்தது. போகப்போக இந்த வார்த்தையானது, பகுத்தறிவுவாதங்களைப் பயன்படுத்தாமல், பெரும்பான்மையான மக்களிடம் ஆசைகள், தப்பெண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டி விட்டு, தனக்கான ஆதரவினை, அதிகாரத்தைத் தேடுகின்ற ஒரு அரசியல் தலைவரைக் குறிப்பதான எதிர்மறை பொருளைக் கொண்டதாக மாறி விட்டது.

2016 டிசம்பர் 31 அன்று மோடி நாட்டிற்கு ஆற்றிய உரையானது இத்தகைய பேச்சிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. நவம்பர் 8 அன்று தான்தோன்றித்தனமாக திடீரென்று உயர்மதிப்பு ரூபாய்த்தாள்களை சட்டரீதியாகச் செல்லாது என்ற அவரது அறிவிப்பின் மூலம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மட்டுப்படுத்துகின்ற நோக்கில், அரைகுறை உண்மைகளால் நிரப்பப்பட்டதாக, முதலில் இந்தி, தொடர்ந்து ஆங்கிலம் என்று அன்றைய தினம் ஆற்றப்பட்ட அவரது 45 நிமிட உரையானது இருந்தது.

பிரதமரால் தனது உரையின் இறுதியில், ஒரு மினி பட்ஜெட் போல அறிவிக்கப்பட்ட ’குறைந்த செலவிலான வீடுகள் மற்றும் விவசாயக் கடன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்: சிறிய, வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான கடன் வரம்பை அதிகரித்தல், வரிச் சலுகைகள்; வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் ( நபார்டு ) மூலம் பாசனத் திட்டங்களுக்கு இரட்டிப்பு நிதியுதவி; பணத்தினை கர்ப்பிணிப் பெண்களுக்கான வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்துதல்: வங்கி வைப்புத் தொகைக்காக முதியவர்களுக்கு அதிக வட்டி வழங்குதல்’ போன்ற அறிவிப்புகள் அனைத்தும், அவரால் அறிவிக்கப்படாத அவரது நோக்கங்களை வெளிப்படுத்தியவையாகவே இருந்தன. இத்தகைய வாய்ச்சவடால்கள் ஆதாரமற்ற அறிக்கைகளின் வடிவிலும் வருகின்றன. அமைப்பிற்குள் மிகவும் அதிகமாக இருக்கிற பணமானது பணவீக்கத்திற்குக் காரணமாக இருப்பதாக மோடி தெரிவித்தார். நம்மைப் போன்ற பிற நாடுகளில் நம்மிடம் இருக்கும் பணத்தின் அளவிற்கு இல்லை என்று சொன்ன மோடி, கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக 500, 1000 ரூபாய்த்தாள்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்காக இல்லாமல், ஓர் இணைப்பொருளாதாரத்தை நடத்துவதற்கே பயன்பட்டு வந்துள்ளதாகவும் கூறினார். இக்கூற்றுகளில் எதுவும் கருத்தில் கொள்ளத்தக்கவையாக இல்லை என்பதை மோடியின் பொருளாதார ஆலோசகர்கள் அவரிடம் தெரிவிக்க வேண்டும். நான்காயிரம் ரூபாயை கர்ப்பிணிப் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது, வங்கிகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் மூன்று கோடி கிஸான் கடன் அட்டைகளை எங்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தக் கூடிய ரூபே கடன் அட்டைகளாக மாற்றுவது என்ற திட்டங்களை அரசு அறிமுகப்படுத்துகிறது என்று கூறுவதில். அரைகுறை உண்மைகளே இருக்கின்றன. உண்மைகள் இவற்றிலிருந்து மாறுபட்டவையாக இருக்கின்றன. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களின் கணக்குகளில் பணத்தினை நேரடியாக செலுத்துவதற்காக மோடிக்குக் கசப்பை ஏற்படுத்தக் கூடிய இந்திராகாந்தியின் பெயரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமானது மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியாதாரம் கிடைக்கவில்லை என்பதால், நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட திட்டமாக உள்ளது. அது மட்டுமல்லாது, கிசான் கடன் அட்டைகளை ரூபே அட்டைகளாக மாற்றுகின்ற திட்டமும் நான்கு வயதான திட்டமாகும்.
சில வாரங்களுக்கு முன்பு வரை கறுப்புப்பணத்தில் அதிக அளவு வங்கிகளுக்குத் திரும்பாமல், மதிப்பற்ற காகிதமாக ஊழல்வாதிகளின் கைகளிலேயே இருந்து விடும் என்பதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு ஒரு மிகப் பெரிய வருவாய் கிடைக்கும் என்பதால், அதனை ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று பிஜேபி ஆதரவாளர்கள் மற்றும் அரசாங்கச் செய்தித் தொடர்பாளர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், புழக்கத்திலுள்ள பணத்தில் பெரும்பான்மையானது வங்கி முறைக்குள் வந்திருப்பது என்பது இந்த நோக்கத்தின் வெற்றியினைக். குறிக்கிறது என்பதாக இப்போது மோடி கூறுகிறார். அவர்கள் எதிர்பார்த்தவைகளில் எதுவும் நடக்கப் போவதில்லை. உண்மையில் பொருளாதாரச் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக் குறைவானது ஏற்கனவே வாழ்வாதாரங்களைச் சிதைத்துள்ளது என்பதைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் கூட ஏற்றுக் கொண்டுள்ளார். அரசாங்கமோ இது குறித்து தகவல்கள் வெளிவராமல் இருப்பதற்கான கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகமாகப் பேசப்பட்ட “இந்தியாவில் தயாரியுங்கள்” (மேக் இன் இந்தியா),

பண மதிப்பிழப்பிற்குப் பின் சூழலானது பாதிக்கப்பட்டதன் விளைவாக, பல துறைகளிலும் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துள்ளன. பிரதமரின் சொல்லாட்சி என்பது நடைமுறையில் இருக்கும் கடுமையான உண்மையை மூடி மறைக்க முடியாது என்பது தெரிகிறது. இது குறித்த சித்திரத்தினை இருவகைகளில் வழங்குவதற்கு அவர் ஒருவரால் மட்டுமே முடியும். நீங்கள் ஊழல்வாதியாகவோ அல்லது நேர்மையானவராகவோ இருக்க வேண்டும். பணமதிப்பிழப்பினை ஆதரிக்கவில்லை எனில், நீங்கள் ஒரு ஊழல்வாதி. நாட்டு மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்றும், தேசபக்தர்கள், தேசத்துரோகிகள் என்றும் பொதுமக்களிடம் தவறான எண்ணங்களைப் புகுத்தி நாட்டினை இரண்டாகப் பிளவுபடுத்திய கடந்த கால அனுபவத்தின் தொடர்ச்சியே இது. இதற்கும் மேலான பகைமை வாத தீப்பொறி பறக்கும் பேச்சுகளை நிச்சயமாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மோடியிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனாலும் புத்திசாலித்தனமான வாக்குவன்மைக்கும் வரம்புகள் உள்ளன. ஜனநாயக நாட்டில் வாய்ச்சவடால் பேசி மக்களை ஏமாற்றுகின்ற ஒருவர் அதிகாரத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியாளராக மாறுவதற்கு இடையே ஒரு சிறிய மெலிதான கோடு மட்டுமே இருக்கிறது. சமகால உலகச் சரித்திரத்தில் அவ்விதமான தலைவர்களுக்கு ஏகப்பட்ட உதாரணங்கள் நம்மிடம் இருக்கின்றன.

2017 ஜனவரி 07 நாளிட்ட எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி பத்திரிக்கைத் தலையங்கம்
தமிழில்: முனைவர்.தா.சந்திரகுரு,விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.