அகமன உணர்வுகளை அதன் வலிகளை சட்டென வெளிப்படுத்தவும், அதன் ஆழ அகலங்களுக்குள் மூழ்கி நீச்சலடிக்க செய்யும் மந்திரம் சிறுகதைகளுக்கு உண்டு. சில பக்கங்களில் முடிந்து போகும் கதைகள் அதுபல இரவுகளை களவாடிய அனுபவம் எல்லோருக்கும் வாய்த்திருக்கும். அப்படியான கதைகளை எழுதிதள்ளிய ஜாம்பவான்களில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக தனது எழுத்தின் வழியே பல முக்கியமான இஸ்லாமிய கதைகளை தமிழ் சமூகத்திற்கு கொடுத்த பெருமை கீரனூர் ஜாகீர் ராஜாவுக்கு உண்டு. அவ்வகையில் தற்போது வெளியாகி உள்ள கொமறு காரியம் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. பதினொரு கதைகள் கொண்ட தொகுப்பை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
திருமணம் செய்யும் காலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதிலா தொட்டும் கூட தனது குடிகார தகப்பனால் இன்னும் நிக்கா ஆகாமல் இருக்கும் ஒரு இளம் பெண்ணின் வாழ்வை அவளுடைய மனவலியை மிக நேர்த்தியாக ஜாகீர் ராஜா பதிவுசெய்துள்ளார். பள்ளிவாசலில் பணியாளராக இருக்கும் அவளுடைய தகப்பனார் லாந்தரை பள்ளி நிர்வாகம் குடிகாரனாக இருப்பதினால் வேலையிலிருந்து நீக்கியது. குடிப்பதற்கு காசு இல்லாத லாந்தர் எப்போதோ முத்தவல்லி என்று கையெழுத்து மட்டும் போட்ட கடிதத்தாளில் அவருடைய திருமணம் ஆகாத நான்கு கொமுறுகளுக்கு நிதியுதவி செய்யக்கோரி முத்தவல்லியே கொடுத்தது போல் கடிதம் ஒன்றை தயார் செய்து ஒவ்வொரு பள்ளியாக சென்று காசு கேட்கும் ஒரு இஸ்லாமிய மனிதரை பற்றிய கொமறு காரிய கதையில், ஓர் தனிஅறைக்குள் இருக்கும் பெண்ணின் உணர்வுகளை, சுமையாய் கழியும் அவளின் இரவுகளை நுட்பமாக சொல்லுகிறார் ஜாகீர்ராஜா. அதே நேரத்தில், இஸ்லாமிய பெண்ணின் அடிமன ஆசையாக அவரின் பெண்ணிய குரலாய் கனவில் வருவதுபோல் ஒரு காட்சியில் “பள்ளி
வாசலில், இமாமின் இடத்தில் நின்று ஆதிலா தொழுகிறாள்.அல்ல, தொழ வைக்கிறாள். பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் இவளைப் பின்தொடர்ந்து அணிவகுத்து நிற்கிறார்கள், தொழுகிறார்கள். ஒரு பேரதிசயம் நிகழ்கிறது. குரான் வசனங்கள் அழகு தமிழில் ஓதுகிறாள்.” இலக்கிய அழகியலோடு மின்னும் நேர்த்தியான கதை.

“கசாப்பின் இதிகாசம்” இந்தத் தொகுப்பில் ஜாகீர் ராஜாவுக்கே உரித்தான அங்கத சுவை மிகுந்த கதையிது. வடக்கு மாநிலத்தில் நூறு வட்டிகடை வைத்திருந்த எப்போதும் ஊரார் வாயில் விழும் வட்டிஉசேன் பக்ரீத்துக்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பதாக முடிவு செய்து ஒட்டகத்தை வரவழைத்து அதனை அறுப்பதே கதை. வட்டி கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்று தெரிந்தே அந்த தொழிலை கன ஜோராக செய்யும் உசேனுக்கும் உரு
வமற்ற ஒரு குரலுக்கும் இடையே நடைபெறும் விவாதம் மூலம் இஸ்லாமியனாக இருந்து கொண்டு அதன்கருத்துக்கு எதிராக பலர் செய்யும் செயலை கேள்விக்கு உட்படுத்துகிறார் ஜாகீர் ராஜா. அதே நேரத்தில் இஸ்லாத்துக்குள் இருக்கும் பழமையான, பிற்போக்கான பல
வற்றையும் சமரசம் செய்யாமல் பதிவுசெய்கிறார். குர்பானி ஒட்டகத்தை நான்கு இஸ்லாமிய வேலையாட்கள் அறுக்கமுடியாத போது வேடிக்கை பார்க்கும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை வட்டி உசேன் உதவிக்கு அழைக்கும் போது குர்பானி அறுக்கவந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் குர்பானி பொருளை தொடுவதால் தீட்டுப் பட்டு
விடும் என்று அறுக்க மறுக்கும் காட்சியில் இந்திய சமூகத்தில் நிலவும் சாதியம் எல்லா மதங்களுக்குள்ளும் எதிரொலிக்கும், அதன் நீட்சியிருக்கும் அது இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்களுக்கும் உள்ளது என்பதனை நுட்பமாக பதிகிறார்.

“பாவம் இவள் பெயர் பரக்கத் நிஸா” தலாக் என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்னுள்ள வாழ்வின் கொடூரத்தை ஒரு குறும்படம் பார்த்து மனபிறழ்வு ஏற்பட்டதை போல
பாதிக்க செய்யும் இந்த தொகுப்பில் எளிதாக கடக்கமுடியாத அற்புதமான கதை. கணவனால் தலாக் சொல்லப்பட்டு அம்மா வீட்டை வந்தடைந்த பரக்கத்நிஸாவின் குழந்தையின் பக்கத்து வீட்டில் தலாக் வாங்கிய ஆமினாவின் குழந்தையின் வழியே இஸ்லாமிய பெண்ணின் வாழ்வை இக்கதை சொல்லிவிடுகிறது. இரு குழந்தைகளும் அடுப்புகூட்டி விளையாடும் பொழுது “என்னடி சோறாக்கி வச்சிருக்கே, உப்புமில்ல ஒறப்பும்மில்ல… ஒரு நாயு திங்குமா இந்த சோறு, போடி உங்கம்மா வீட்டுக்கு, நான் தலாக் சொல்லுறேன்” என்று இரு குழந்தைகளுக்கு இடையே நடைபெறும் உரையாடல் இஸ்லாமிய வீட்டிற்குள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான உரையாடலை கண்ணில் நிறுத்துகிறது. தலாக் என்ற ஒற்றை சொல் எதுக்கெல்லாம் எழுந்து நின்றது என்பதை சொல்லும் மிக முக்கிய கதை.

இந்த தொகுப்பில் வரும் எல்லா கதைகளிலும் பெண் வாழ்வை ஒரு பெண்ணியவாதியாக நின்று பதிவு செய்கிறார் ஜாகீர் ராஜா. தமிழ் சமூகத்தில் இந்த தொகுப்பு எப்போதும் நினைவில் நிற்கும்.

அ.கரீம்

கொமறு காரியம்
ஆசிரியர்: கீரனூர் ஜாகீர் ராஜா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
எண், 57, 53 வது தெரு
9வது அவென்யூ, அசோக் நகர்,
சென்னை – 600 083
பக்:128 விலை ரூ. 110/- தொலைபேசி: 24896979

Leave a Reply

You must be logged in to post a comment.